ஆதிதிராவிடர் நலத்துறை மூலம் ரூ.1 கோடி நிதி உதவி நாராயணசாமி வழங்கினார்
ஆதிதிராவிடர் நலத்துறை மூலம் ரூ.1 கோடியே 17 லட்சம் நிதி உதவியினை முதல்-அமைச்சர் நாராயணசாமி வழங்கினார்.
புதுச்சேரி,
புதுவை அரசு ஆதிதிராவிடர் நலத்துறை மூலம் கலப்பு திருமண தம்பதிகளுக்கு ஊக்கத்தொகை, வன்கொடுமையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிதி உதவி வழங்கும் நிகழ்ச்சி சட்டசபை வளாகத்தில் நேற்று நடந்தது. நிகழ்ச்சிக்கு அமைச்சர் கந்தசாமி தலைமை தாங்கினார்.
முதல்-அமைச்சர் நாராயணசாமி நிகழ்ச்சியில் கலந்துகொண்டு நிதி உதவிகளை வழங்கினார். இதில் கலப்பு திருமணம் செய்த 43 தம்பதிகளுக்கு ஊக்கத்தொகையாக தலா ரூ.2.50 லட்சம் வீதம் ரூ.1 கோடியே 7 லட்சத்து 50 ஆயிரமும், வன்கொடுமையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இடைக்கால நிவாரணமாக 2 பேருக்கு தலா ரூ.50 ஆயிரமும், ஒருவருக்கு ரூ.25 ஆயிரமும், வன்கொடுமையால் கொலை செய்யப்பட்ட வில்லியனூர் கரையான்பேட்டையை சேர்ந்த தமிழரசன் என்ற இளவரசன் குடும்பத்துக்கு ரூ.8 லட்சத்து 25 ஆயிரமும் நிவாரணமாக வழங்கப்பட்டது.
ஒட்டுமொத்தமாக ரூ.1 கோடியே 17 லட்சம் நிதி உதவி வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியின்போது துணை சபாநாயகர் சிவக்கொழுந்து, புதுவை அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதி ஜான்குமார், ஆதிதிராவிடர் நலத்துறை இயக்குனர் ரகுநாதன் மற்றும் அதிகாரிகள் உடனிருந்தனர்.
Related Tags :
Next Story