காட்டுத்தீ ஏற்படுவதை தடுக்க கொடைக்கானல் மலைப்பாதையில் வனத்துறையினர் வாகன சோதனை
காட்டுத்தீ ஏற்படுவதை தடுக்க பழனி- கொடைக்கானல் மலைப்பாதையில் வனத்துறையினர் வாகன சோதனையை தீவிரப்படுத்தி உள்ளனர்.
பழனி,
மேற்குத் தொடர்ச்சி மலைத்தொடரில் அமைந்துள்ள இயற்கை கொடைதான் கொடைக்கானல். இங்கு செல்ல வத்தலக்குண்டு, பழனி வழியாக மலைப்பாதைகள் உள்ளன. கோவை, ஈரோடு, திருப்பூர் பகுதியில் இருந்து வரும் சுற்றுலா பயணிகள் பெரும்பாலும் பழனி மலைப்பாதையை அதிகம் பயன்படுத்துகின்றனர்.
இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு கொடைக்கானல் மலையில் ஏற்பட்ட காட்டுத்தீயில் விலையுயர்ந்த மரங்கள் கருகின. இதுகுறித்து வனத்துறையினர் விசாரணை நடத்தினர். அதில் காய்ந்துள்ள மரங்கள், செடிகள் உரசும்போது தீ ஏற்படும். ஆனால் மர்ம நபர்கள் வனப்பகுதியில் சமைத்தல், புகைபிடித்துவிட்டு தீயை அணைக்காமல் செல்லுதல் உள்ளிட்ட காரணங்களாலேயே அதிகம் தீப்பிடிப்பதாக தெரிவித்துள்ளனர்.
தற்போது கொடைக் கானலில் சீசன் தொடங்கும் சூழல் உள்ளது. அவ்வாறு சீசன் தொடங்கினால் தமிழகம் மட்டுமின்றி கேரளா, கர்நாடகா, ஆந்திரா போன்ற மாநிலங்களில் இருந்தும் சுற்றுலா பயணிகள் கொடைக்கானலில் குவிந்து விடுவர். மேலும் பள்ளி ஆண்டுத்தேர்வு முடிந்தபின் ஏராளமானோர் தங்கள் குடும்பத்துடன் கொடைக்கானலுக்கு சுற்றுலா வருவர். மேலும் தற்போதும் பல்வேறு இடங்களில் இருந்தும் சுற்றுலா பயணிகள் வந்த வண்ணம் உள்ளனர். எனவே கொடைக்கானல் மலைப்பாதையில் தீவிர ரோந்து பணியில் வனத்துறையினர் ஈடுபட்டுள்ளனர். இதுகுறித்து பழனி வனச்சரகர் கணேஷ்ராமிடம் கேட்டபோது, கூறியதாவது:-
பழனி அருகேயுள்ள தேக்கந்தோட்டம் பகுதியில் உள்ள வனத்துறை சோதனைச்சாவடியில் வாகன சோதனை தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. மலைப்பாதையில் செல்லும் சுற்றுலா வாகனங்கள், பஸ்கள் போன்றவற்றை நிறுத்தி தீவிர சோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. எளிதில் தீப்பற்றும் பொருட்களை பஸ்களில் கொண்டு செல்ல வேண்டாம் என்றும் அறிவுறுத்தப்பட்டு வருகிறது.
மேலும் வனப்பகுதியை காக்க வேண்டியதன் அவசியம், காடுகளின் முக்கியத்துவம் குறித்தும் விழிப்புணர்வு நோட்டீசுகளும் வினியோகிக்கப்பட்டு வருகிறது. வனப்பகுதியில் தீ ஏற்படுவதை தடுக்க இரவு நேர கண்காணிப்பு பணியில் கூடுதலாக வன அலுவலர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
இவ்வாறு அவர் கூறினார்.
Related Tags :
Next Story