பல்லாயிரக்கணக்கான பெண் பட்டதாரிகளை புதுவை உருவாக்கியுள்ளது முதல்-அமைச்சர் நாராயணசாமி பெருமிதம்


பல்லாயிரக்கணக்கான பெண் பட்டதாரிகளை புதுவை உருவாக்கியுள்ளது முதல்-அமைச்சர் நாராயணசாமி பெருமிதம்
x
தினத்தந்தி 8 March 2019 3:00 AM IST (Updated: 8 March 2019 1:28 AM IST)
t-max-icont-min-icon

புதுவை பல்லாயிரக் கணக்கான பெண் பட்டதாரிகளை உருவாக்கியுள்ளது என்று முதல்-அமைச்சர் நாராயணசாமி பெருமிதத்துடன் கூறினார்.

புதுச்சேரி, 

புதுச்சேரி முதல்-அமைச்சர் நாராயணசாமி வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில் கூறியிருப்பதாவது:-

உலக மக்கள் தொகையில் 50 சதவீதம் மகளிர் இருக்கிறார்கள். மகளிர் சக்தி மகாசக்தி. நினைப்பதை சாதிக்கும் வல்லமை படைத்தவர்கள் பெண்கள். இந்திய நாட்டின் வளர்ச்சிக்கு மகளிரின் பங்கு மகத்தானது. அதை உணர்ந்த முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி பெண்களுக்கு அரசியல் அங்கீகாரம் கொடுக்க வேண்டும் என்பதற்காக பஞ்சாயத்து மற்றும் நகராட்சிகளில் 33 சதவீத இடஒதுக்கீடு வழங்க வேண்டும் என்று நாடாளுமன்றத்தில் சட்டம் நிறைவேற்றினார்.

அதன் மூலம் 30 லட்சம் பெண்கள் பஞ்சாயத்து மற்றும் மாநகராட்சிகளை நடத்துகின்ற வல்லமை பெற்றிருக்கிறார்கள். அதேபோல் சட்டமன்றம், நாடாளுமன்றத்தில் பெண்களுக்கு 33 சதவீதம் இடஒதுக்கீடு கொடுக்க வேண்டும் என்ற சட்டத்தை நாடாளுமன்றத்தில் நிறைவேற்றுவதற்கு காங்கிரஸ் ஆட்சியில் முயற்சி எடுத்து பா.ஜ.க. ஆட்சியில் அது கிடப்பில் போடப்பட்டுள்ளது.

புதுவை மாநிலத்தில் பெண்களுக்கு உரிமை வழங்குவதற்கு அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படுகிறது. மகளிர் மேம்பாட்டு துறையானது பெண்களின் வளர்ச்சிக்காக முனைந்து பல திட்டங்களை நிறைவேற்றி வருகிறது. மகளிர் மேம்பாட்டிற்காக, மகளிர் சுய உதவிக்குழுக்கள் அமைக்கப்பட்டு அவர்கள் வருமானத்தை பெருக்கும் திட்டத்தை அரசு நிறைவேற்றி வருகிறது.

கால்நடை பராமரிப்பு, கோழி பண்ணைகள், ஆட்டுப்பண்ணைகள் போன்ற கிராமப்புறம் சார்ந்த வேலைவாய்ப்புகளை பெண்கள் நடத்த உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. பெண்கள் கல்வியில் சிறந்து விளங்குகிறார்கள். நமது மாநிலம் பல்லாயிரக்கணக்கான பெண் பட்டதாரிகளை உருவாக்கியுள்ளது. ஆயிரக்கணக்கான பெண்கள் மருத்துவர்களாகவும், பொறியாளர்களாகவும் சாதனை படைத்து வருகின்றனர். பெண்கள் தொழில் செய்ய அதிக மானியம் தரும் மாநிலம் புதுவை என்பதில் பெருமை கொள்கிறேன். பெண்கள் பாதுகாப்பிற்கு முன்னுரிமை கொடுத்து நமது மாநிலத்தை அமைதி பூங்காவாக திகழ வைத்துள்ளோம். சமூக, பொருளாதார மற்றும் அரசியல் ரீதியாக புதுச்சேரி சிறந்து விளங்கும் என்ற நோக்கில் நம் மாநிலத்தில் உள்ள மகளிர் அனைவருக்கும் மகளிர் தின நல்வாழ்த்துக்கள்.

இவ்வாறு அதில் அவர் கூறியுள்ளார்.

அமைச்சர் கந்தசாமி வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில் ‘நாட்டின் வளர்ச்சிக்கும், சமூக முன்னேற்றத்திற்கும் மனித வாழ்விற்கும் சரிபாதியாய் துணை நிற்கும் பெண்களின் பெருமையை போற்றும் இந்த சர்வதேச மகளிர் தினத்தில் பெண்களுக்கு உறுதுணையாக நின்று அவர்களின் வளர்ச்சியில் சரிநிகர் வாய்ப்பினை நல்கிட அனைவரும் உறுதியெடுக்க வேண்டும்.

தாயாக, தாரமாக, சகோதரியாக என மனிதனின் வாழ்வில் அனைத்து நிலைகளிலும் ஆணிவேராக நிற்பது மண்ணில் இருந்து விண்ணில் பறப்பது வரை பலதுறைகளிலும் சாதனை படைத்து மானுட வாழ்விற்கே பெருமை சேர்க்கும் போற்றுதலுக்குரிய பெண்களுக்கு இந்த சர்வதேச மகளிர் தினத்தில் என்னுடைய நல்வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன்’ என்று அதில் கூறப்பட்டுள்ளது.

Next Story