கிருமாம்பாக்கம் அருகே காங்கிரஸ்-என்.ஆர்.காங்கிரஸ் கட்சியினர் திடீர் மோதல் சாலை மறியல்; பரபரப்பு
கிருமாம்பாக்கம் அருகே கோவில் விழாவில் காங்கிரஸ்-என்.ஆர்.காங்கிரஸ் கட்சியினர் மோதலில் ஈடுபட்டனர். இதையொட்டி திடீர் மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
பாகூர்,
புதுவை கிருமாம்பாக்கம் அருகே உள்ள பிள்ளையார்குப்பம் பேட் அங்காளம்மன் கோவில் திருவிழா நேற்று மாலை கொடியேற்றத்துடன் தொடங்கியது. இந்த விழாவில் அமைச்சர் கந்தசாமி கலந்து கொண்டார். அப்போது என்.ஆர்.காங்கிரஸ் கட்சியை சேர்ந்த முன்னாள் அமைச்சர் ராஜவேலு, என்.ஆர்.காங்கிரஸ் பிரமுகர் லட்சுமிகாந்தன் ஆகியோரும் கோவிலுக்கு வந்தனர். அவர் களுக்கு அங்கிருந்தவர்கள் மரியாதை செய்தனர். இதன்பின் முன்னாள் அமைச்சர் ராஜவேலு கோவிலை சுற்றி வந்தார்.
அப்போது அந்த பகுதியை சேர்ந்த 2 பேர் அவரை வழிமறித்து ஏன் இங்கு வந்தீர்கள், உங்களை அழைத்தது யார்? என்று கேட்டதாக தெரிகிறது. மேலும் அவர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதில் ஆத்திரம் அடைந்த அவர்கள் 2 பேரும் திடீரென ராஜவேலுவை பிடித்து தள்ளியதாக கூறப்படுகிறது. இதில் அவர் நிலை தடுமாறி கீழே விழுந்தார். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.
இது பற்றி தகவல் அறிந்து என்.ஆர்.காங்கிரஸ் பிரமுகர்கள் அங்கு கூடினர். இதேபோல் எதிர் தரப்பை சேர்ந்த காங்கிரஸ் கட்சியினர் அங்கு ஒன்று சேர்ந்தனர். இதனால் இருதரப்பினரும் கோஷ்டிகளாக மோதிக் கொள்ளும் சூழ்நிலை உருவானது. இதுகுறித்து தகவல் அறிந்து கிருமாம்பாக்கம் போலீசார் அங்கு விரைந்து சென்று இருதரப்பினரையும் கலைந்து போகச் செய்தனர். இதனால் மோதல் தவிர்க்கப்பட்டது.
இதற்கிடையே முன்னாள் அமைச்சர் ராஜவேலுவை தாக்கியவர்களை உடனடியாக கைது செய்ய வேண்டும் என்று கூறி அவரது ஆதரவாளர்கள் கிருமாம்பாக்கத்தில் புதுவை-கடலூர் சாலையில் மறியலில் ஈடுபட்டனர். போலீசார் அங்கு விரைந்து சென்று அவர்களுடன் சமாதான பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது ராஜவேலுவை தாக்கிய 2 பேரை கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீசார் உறுதி அளித்ததால் மறியல் கைவிடப்பட்டது. இதனால் அங்கு சுமார் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. அந்த பகுதியில் தொடர்ந்து பதற்றம் நிலவுவதால் அங்கு போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
Related Tags :
Next Story