காங்கிரசுடன் தி.மு.க. அமைத்திருப்பது மக்கள் விரோத கூட்டணி அமைச்சர் செல்லூர் ராஜூ பேட்டி


காங்கிரசுடன் தி.மு.க. அமைத்திருப்பது மக்கள் விரோத கூட்டணி அமைச்சர் செல்லூர் ராஜூ பேட்டி
x
தினத்தந்தி 8 March 2019 4:30 AM IST (Updated: 8 March 2019 1:45 AM IST)
t-max-icont-min-icon

காங்கிரசுடன் தி.மு.க. அமைத்திருப்பது மக்கள் விரோத கூட்டணி என்று அமைச்சர் செல்லூர் ராஜூ கூறினார்.

சமயபுரம்,

மண்ணச்சநல்லூர்-துறையூர் செல்லும் சாலையில் உள்ள பூனாம்பாளையத்தில் 20 ஆண்டு குத்தகையின் அடிப்படையில் பெட்ரோல் விற்பனை நிலையம் அமைக்க டான்பெட் மூலமாக இந்தியன் ஆயில் கார்ப்பரேசனுடன் ஒப்பந்தம் செய்யப்பட்டு, திருச்சி மாவட்டத்தில் முதல் முறையாக பெட்ரோல் விற்பனை நிலையம் அமைக்கப்பட்டது. இதன் திறப்பு விழா நேற்று நடைபெற்றது.

இதில் கூட்டுறவு துறை அமைச்சர் செல்லூர் ராஜூ கலந்து கொண்டு முதல் விற்பனையை தொடங்கி வைத்தார். அமைச்சர் வெல்லமண்டி நடராஜன், ரத்தினவேல் எம்.பி, திருச்சி மாவட்ட கலெக்டர் சிவராசு மற்றும் கூட்டுறவு துறை அதிகாரிகள், தலைவர்கள், உள்ளாட்சி மன்ற முன்னாள் பிரதிநிதிகள், அ.தி.மு.க. முக்கிய பிரமுகர்கள் மற்றும் மண்பரை தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி துணைத்தலைவர் சசிகுமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

தி.மு.க. செய்தது என்ன?

பின்னர் அமைச்சர் செல்லூர்ராஜூ நிருபர்களிடம் கூறியதாவது:-

தி.மு.க.வுக்கு கொள்கை என்று எதுவும் கிடையாது. பதவி வெறி பிடித்துதான் அலைவார்கள். சம்பாதிப்பது மட்டுமே அவர்கள் குறிக்கோள். 10 ஆண்டுகள் மத்தியில் காங்கிரசோடு கூட்டணியில் இருந்த தி.மு.க. தமிழகத்திற்கு என்ன செய்தார்கள்?. காவிரி பிரச்சினை, முல்லை பெரியாறு அணை போன்ற பிரச்சினைகளில் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை.

கூடா நட்பு கேடாய் முடியும், என்று காங்கிரசை விமர்சனம் செய்த தி.மு.க. தலைவர் ஸ்டாலின் இன்று காங்கிரசுடன் சேர்ந்து அமைத்திருப்பது மக்கள் விரோத கூட்டணி. ஆனால், அ.தி.மு.க. தலைமையில் அமைந்திருப்பது மக்கள் நல கூட்டணி.

இவ்வாறு அவர் கூறினார்.

நல்லதே நடக்கும்

நாடாளுமன்றத்தில் தற்போது அ.தி.மு.க.வுக்கு 37 எம்.பி.க்கள் உள்ள நிலையில் நடந்துள்ள தொகுதி பங்கீட்டில் 15-க்கும் மேற்பட்ட தொகுதிகள் கூட்டணி கட்சிகளுக்கு ஒதுக்கப்பட்டுள்ளதே என்று நிருபர்கள் கேட்டதற்கு, தற்போது உள்ள அரசியல் சூழ்நிலையில் கூட்டணி அமைத்து தான் போட்டியிட வேண்டியது உள்ளது, என்றார். தே.மு.தி.க. எந்த பக்கம் வரும் என்ற மற்றொரு கேள்விக்கு நல்லதே நடக்கும் என்று தெரிவித்தார். 

Next Story