பெண்களுக்கான பாதுகாப்பை ராகுல்காந்தி தான் தர முடியும் குஷ்பு பேச்சு


பெண்களுக்கான பாதுகாப்பை ராகுல்காந்தி தான் தர முடியும் குஷ்பு பேச்சு
x
தினத்தந்தி 8 March 2019 4:45 AM IST (Updated: 8 March 2019 2:14 AM IST)
t-max-icont-min-icon

பெண்களுக்கான பாதுகாப்பை ராகுல்காந்தியால்தான் தர முடியும் என்று காங்கிரஸ் கட்சியின் அகில இந்திய செய்தி தொடர்பாளர் குஷ்பு கூறினார்.

நாகர்கோவில்,

நாகர்கோவிலில் நடைபெற்ற காங்கிரஸ் தலைவர்கள் மற்றும் நிர்வாகிகள் ஆலோசனை கூட்டத்தில் அகில இந்திய செய்தி தொடர்பாளர் குஷ்பு பங்கேற்று பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

தமிழகத்தில் ஒவ்வொரு முறையும் காங்கிரஸ் கட்சியும், அதன் கூட்டணி கட்சிகளும் வெற்றி பெறும்போது மத்தியில் காங்கிரஸ் ஆட்சி அமைக்கும். இதுதான் வரலாறு. இந்த முறையும் ராகுல்காந்தி தலைமையில் காங்கிரஸ் ஆட்சி அமைவது உறுதி. குமரி மாவட்டத்துக்கு 13-ந் தேதி வரும் ராகுல்காந்தி நம்முடைய எழுச்சியை பார்த்து பிரம்மிக்க வேண்டும். நாம் தான் அடுத்த பிரதமர் என்ற உறுதியான நம்பிக்கை அவருக்கு வர வேண்டும்.

கன்னியாகுமரியில் இருந்து டெல்லி வரைக்கும் நம்முடைய வெற்றி தொடரும். குமரி மாவட்ட மக்கள் ஒவ்வொருவரின் மனதிலும் காங்கிரஸ் உணர்வு இருக்கிறது. இந்தியாவின் அடுத்த பிரதமர் ராகுல்காந்தி தான் என்று மு.க.ஸ்டாலின் சொல்லி இருக்கிறார். 40 தொகுதிகளிலும் நம் கூட்டணி தான் வெற்றி பெற போகிறது. அதற்கு நாம் அனைவரும் ஒன்றாக செயல்பட வேண்டும். நமக்குள் காங்கிரஸ் உணர்ச்சி இருந்தால் தான் அது முடியும். ஜெயிக்கும்போது வெற்றி மட்டும் தான் நம் கண் முன் இருக்க வேண்டும். பெண்களுக்கான பாதுகாப்பை ராகுல்காந்தியால் தான் வழங்க முடியும். இதுபோல நாட்டின் பாதுகாப்பு, மீனவர்களின் வளர்ச்சி, வேலை வாய்ப்பு உள்ளிட்ட அனைத்தையும் வழங்க அவரால் தான் முடியும்.

3 மாநில தேர்தல் பிரசாரத்தின் போது 10 நாட்களுக்குள் விவசாயிகள் கடன் தள்ளுபடி செய்யப்படும் என்று ராகுல்காந்தி கூறினார். ஆனால் 10 மணி நேரத்தில் தள்ளுபடி செய்து அதற்கான ஆணையை விவசாயிகள் கையில் வழங்கினார். ஆனால் தற்போது மத்திய அரசு 6 ஆயிரம் ரூபாயும், மாநில அரசு 2 ஆயிரம் ரூபாயும் கொடுக்கிறது.

தமிழகத்தில் முதல்-அமைச்சரும், துணை முதல்-அமைச்சரும் முகவரி இல்லாதவர்களாக செயல்பட்டு வருகிறார்கள். அவர்கள் நாற்காலியை காப்பாற்றுவதற்காக அரசு நடத்துகிறார்கள்.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story