கொலை மிரட்டல் விடுத்தவர்களை கைது செய்ய வலியுறுத்தி கிராம நிர்வாக அலுவலர்கள், உதவியாளர்கள் தர்ணா


கொலை மிரட்டல் விடுத்தவர்களை கைது செய்ய வலியுறுத்தி கிராம நிர்வாக அலுவலர்கள், உதவியாளர்கள் தர்ணா
x
தினத்தந்தி 8 March 2019 4:15 AM IST (Updated: 8 March 2019 2:19 AM IST)
t-max-icont-min-icon

திருவாடானை அருகே கொலை மிரட்டல் விடுத்தவர்களை கைது செய்ய வலியுறுத்தி கிராம நிர்வாக அலுவலர்கள், உதவியாளர்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தொண்டி,

திருவாடானை அருகே குஞ்சங்குளம் கிராமத்தில் கடந்த சில தினங்களுக்கு முன்பு அந்த கிராமத்தை சேர்ந்த ராமாமிர்தம் என்பவருக்கு சொந்தமான நிலத்தை சர்வே செய்ய சென்ற சிறு மலைக்கோட்டை கிராம நிர்வாக அலுவலர் சண்முகம் மற்றும் கிராம உதவியாளர் அன்பரசன் ஆகியோருக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக அந்த கிராமத்தை சேர்ந்த ராமமூர்த்தி என்பவர் மீது திருவாடானை போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

இந்த நிலையில் கிராம நிர்வாக அலுவலர் சண்முகம் திருவாடானை தாலுகா அலுவலகத்தில் பணியில் ஈடுபட்டிருந்தாராம். அப்போது அங்கு வந்த ராமமூர்த்தியின் உறவினர் ஜவகர் கிராம நிர்வாக அலுவலருக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது. அதனை தொடர்ந்து திருவாடானை தாசில்தார் சேகரை கிராம நிர்வாக அலுவலர்கள் மற்றும் கிராம உதவியாளர்கள் நேரில் சந்தித்து சிறுமலைக்கோட்டை கிராம நிர்வாக அலுவலர் சண்முகம் மற்றும் கிராம உதவியாளர் அன்பரசன் ஆகியோருக்கு கொலை மிரட்டல் விடுத்த ராமமூர்த்தி மற்றும் அவரது உறவினர் ஜவகர் ஆகியோரை உடனடியாக கைது செய்ய உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அதுவரை பணியில் ஈடுபடமாட்டோம் எனவும் தெரிவித்தனர்.

அதனை தொடர்ந்து கிராம நிர்வாக அலுவலர் மற்றும் கிராம உதவியாளருக்கு கொலை மிரட்டல் விடுத்த நபர்கள் மீது உரிய நடவடிக்கை எடுத்து கைது செய்யாத காவல்துறையை கண்டித்து தாலுகா அலுவலகம் முன்பு கிராம நிர்வாக அலுவலர் சங்க மாவட்ட தலைவர் சக்திவேல் தலைமையில் கிராம நிர்வாக அலுவலர்கள் மற்றும் கிராம உதவியாளர்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தில் கிராம நிர்வாக அலுவலர்கள் சங்க வட்ட கிளை செயலாளர் நம்பு ராஜேஸ்,பொருளாளர் கார்த்திக்,கிராம உதவியாளர் சங்க தலைவர் பிச்சை,செயலாளர் ஸ்ரீதர் ஆகியோர் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

Next Story