காரைக்குடியில் ரூ.50 லட்சம் குட்கா பறிமுதல், 4 பேர் மீது வழக்கு - கார், லாரி பறிமுதல்
காரைக்குடியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த ரூ.50 லட்சம் மதிப்பிலான குட்கா உள்ளிட்ட போதை பொருட்களை போலீசார் பறிமுதல் செய்து 4 பேர் மீது வழக்கு பதிவு செய்தனர். மேலும் இந்த வழக்கு தொடர்பாக ஒரு கார், லாரி பறிமுதல் செய்யப்பட்டது.
காரைக்குடி,
சிவகங்கை மாவட்டம் காரைக்குடி வடக்கு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் செல்லப்பாண்டியன் இரவு ரோந்துப்பணி மேற்கொண்டார். அப்போது பாண்டியன் நகர்அருகே வந்த காரை நிறுத்தி விசாரணை மேற்கொண்டார். அதில் காரில் வந்த 2 பேரும் முன்னுக்குப்பின் முரணாக தகவல் கூறினர். அதைத்தொடர்ந்து அவர்களை போலீஸ்நிலையம் கொண்டு மேல் விசாரணை நடத்தினார். அதில் சேலத்தைச் சேர்ந்த சதீஷ் (வயது 26), மணி (26) என்றும், இவர்கள் பெங்களூருவிலிருந்து காரில் வந்ததாகவும், லாரியில் குட்கா உள்ளிட்ட போதைப் பொருட்களைக் கொண்டு வந்ததாகவும் கூறினர்.
மேலும் லாரி காரைக்குடியில் குட்கா உள்ளிட்ட போதை பொருட்களை இறக்கி கொண்டு இருப்பதாகவும் தெரிவித்தனர். அதைத்தொடர்ந்து இந்த தகவல் மேல் அதிகாரிகளுக்கு தெரிவிக்கப்பட்டதும், துணை போலீஸ் சூப்பிரண்டு அருண் தலைமையிலான போலீசார், சுப்பிரமணியபுரம் 10-வது வீதி தெற்கு விரிவு பகுதிக்கு வந்தனர். அங்கு உள்ள ஒரு வீட்டில் குட்கா உள்ளிட்ட போதைப் பொருட்களை இறக்கி விட்டு லாரி சென்று விட்டது தெரியவந்தது. அதையடுத்து போலீசார் அந்த வீட்டை சோதனை செய்தனர்.
அதில் குட்கா உள்ளிட்ட போதைப் பொருட்கள் ஏராளமாக மூடை மூடையாக பதுக்கி வைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. விசாரணையில் காரைக்குடி பாரதிதாசன் தெருவைச் சேர்ந்த ரவிச்சந்திரன் (47) என்பவர் வாடகைக்கு எடுத்து குட்கா உள்ளிட்ட போதை பொருட்களை பதுக்கி வைத்து விற்பனை செய்து வந்தது தெரிந்தது. அதைத்தொடர்ந்து ரவிச்சந்திரனை பிடித்த போலீசார், அவர் மூலம் லாரி டிரைவர் சாரதி, சதீஸ், மணி ஆகிய 4 பேரையும் பிடித்து விசாரணை நடத்தினர். அதில் குட்கா உள்ளிட்ட போதை பொருட்கள் பெங்களூருவில் எங்கிருந்து வாங்கி, எங்கெல்லாம் விற்பனை செய்யப்பட்டது என்று விசாரணை நடத்தினர்.
பின்பு லாரியையும், காரையும் பறிமுதல் செய்து, அவர்கள் 4 பேரையும் உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் செல்வம், ஜெயக்குமார் ஆகியோரிடம் போலீசார் ஒப்படைத்தனர். தொடர்ந்து துறையின் மாவட்ட அலுவலர் தங்க விக்னேஷ் உத்தரவின் பேரில் அதிகாரிகள் மேல் நடவடிக்கை மேற்கொண்டனர். இதுகுறித்து உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் கூறுகையில், பறிமுதல் செய்யப்பட்ட குட்கா உள்ளிட்ட 7 வகையான பொருட்கள் மனித உயிருக்கு பெரும் ஆபத்தை விளைவிக்கும்.
இது அரசால் தடை செய்யப்பட் பொருட்களாகும். இவை 30 மெட்ரிக் டன் அளவு உள்ளது. இவற்றின் மதிப்பு ரூ.50 லட்சம் ஆகும். இதுதொடர்பாக 4 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. கைப்பற்றப்பட்ட பொருட்களின் மாதிரி பரிசோதனைக்காக ஆய்வகத்திற்கு அனுப்பப்படும். அதன் முடிவின்படி வழக்கின் பிரிவுகள் பதிவு செய்யப்படும். குட்கா உள்ளிட்ட போதை பொருட்களின் உற்பத்தி இடம், வினியோகிப்பவர்கள் குறித்து தனிப்படையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். இவ்வாறு தெரிவித்தனர்.
Related Tags :
Next Story