பொள்ளாச்சியில் 4 பேர் கைது, பாலியல் பலாத்கார வழக்கை சி.பி.சி.ஐ.டி.க்கு மாற்ற வேண்டும்
பொள்ளாச்சியில் பெண்களை மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்து 4 பேர் கைதான வழக்கை சி.பி.சி.ஐ.டி.க்கு மாற்ற வேண்டும் என்று மாதர் சங்கத்தினர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டிடம் மனு அளித்தனர்.
கோவை,
கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் பெண்களை மிரட்டி ஆபாச படம் எடுத்து பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில் திருநாவுக்கரசு (வயது 27), சதீஷ் (29), வசந்தகுமார் (24), சபரிராஜன் (25) ஆகிய 4 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டு உள்ளனர். இந்த நிலையில் அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்க மாவட்ட செயலாளர் அ.ராதிகா தலைமையில் கோவை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாண்டியராஜனை சந்தித்து மனு கொடுத்தனர். அந்த மனுவில் கூறப்பட்டு இருப்பதாவது:-
கைதான 4 பேர் கடந்த 8 ஆண்டுகளாக பெண்களை மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்து வந்துள்ளனர். இதில் மேலும் பலருக்கு தொடர்பு இருப்பதாகவும், அரசியல் பின்புலம் இருப்பதாகவும் கைதான திருநாவுக்கரசு தலைமறைவாக இருந்தபோது வெளியிட்ட வீடியோ காட்சி மூலம் தெரியவந்துள் ளது. ஆகவே இந்த வழக்கை பெண் அதிகாரியை கொண்டு விசாரணை நடத்த வேண்டும். கைதானவர்கள் மீது கடும் சட்டப்பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்ய வேண்டும்.
இந்த வழக்கை சி.பி.சி.ஐ.டி. சிறப்பு புலனாய்வு பிரிவு விசாரணைக்கு உத்தரவிடுவதுடன், இதில் தொடர்புடைய அனைவரையும் கைது செய்ய வேண்டும். இவர்களால் பலர் பாதிக்கப்பட்டு தற்கொலை செய்து கொண்டு இருக்கலாம் என்று சந்தேகிக்கிறோம். எனவே கடந்த 2012-ம் ஆண்டு முதல் 2019-ம் ஆண்டுவரை தற்கொலை செய்து கொண்ட பெண்களின் வழக்கை மீண்டும் விசாரணை செய்ய வேண்டும்.
இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டு உள்ளது.
மனுவை அளித்த பின்னர், ராதிகா நிருபர்களிடம் கூறும்போது, இந்த வழக்கை பெண் போலீஸ் அதிகாரியின் விசாரணைக்கு உத்தரவிடுவதாக போலீஸ் சூப்பிரண்டு உறுதி அளித்து உள்ளனர். போலீஸ் அதிகாரிகளை, ஆளும் கட்சி பிரமுகர்கள் சந்தித்து இருப்பதால் அரசியல் அதிகாரத்தை பயன்படுத்தி இந்த வழக்கில் 4 பேர் கைதுடன் விட்டு விடக்கூடாது. இதில் தொடர்புடைய அனைவரையும் கைது செய்து சட்டத்தின் முன் நிறுத்தி தண்டனை பெற்றுக்கொடுக்க போலீஸ் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
Related Tags :
Next Story