பெங்களூருவில் பெண்களை மிரட்டி நகைகள் கொள்ளை: தமிழகத்தை சேர்ந்த 3 வாலிபர்கள் கைது ரூ.40 லட்சம் தங்க சங்கிலிகள் மீட்பு


பெங்களூருவில் பெண்களை மிரட்டி நகைகள் கொள்ளை: தமிழகத்தை சேர்ந்த 3 வாலிபர்கள் கைது ரூ.40 லட்சம் தங்க சங்கிலிகள் மீட்பு
x
தினத்தந்தி 8 March 2019 4:30 AM IST (Updated: 8 March 2019 3:05 AM IST)
t-max-icont-min-icon

பெங்களூருவில் பெண்களை மிரட்டி நகைகள் கொள்ளையடித்து வந்த தமிழகத்தை சேர்ந்த 3 வாலிபர்கள் கைது செய்யப்பட்டனர்.

பெங்களூரு, 

பெங்களூருவில் பெண்களை மிரட்டி நகைகள் கொள்ளையடித்து வந்த தமிழகத்தை சேர்ந்த 3 வாலிபர்கள் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்து ரூ.40 லட்சம் தங்க சங்கிலிகள் மீட்கப்பட்டுள்ளன.

பெங்களூரு தெற்கு மண்டல துணை போலீஸ் கமிஷனர் அண்ணாமலை நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

தமிழ்நாட்டை சேர்ந்தவர்கள்

பெங்களூரு தெற்கு மண்டலத்தில் உள்ள கே.ஜி.நகர் போலீஸ் எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் தனியாக நடந்து செல்லும் பெண்களிடம் கத்தியை காட்டி மிரட்டி தங்க சங்கிலிகளை மர்மநபர்கள் கொள்ளையடித்து வந்தனர். இந்த சம்பவங்களில் ஈடுபடும் கும்பலை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டது. இந்த நிலையில், கே.ஜி.நகர் போலீசாருக்கு கிடைத்த தகவலின் பேரில் பெண்களை மிரட்டி தங்க சங்கிலிகள் பறித்து வந்த 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைதானவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில், அவர்கள் தமிழ்நாடு திருவண்ணாமலை டவுன் பகுதியை சேர்ந்த அருண்குமார்(வயது 33), கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரி பட்டணாவை சேர்ந்த கார்த்திக் (30) என்று தெரியவந்தது. இவர்கள் 2 பேரும் பெங்களூருவில் வாடகை வீட்டில் வசித்து வருகின்றனர். பெங்களூருவில் வீடுகள் முன்பு நிறுத்தப்பட்டு இருந்த 2 மோட்டார் சைக்கிள்களை 2 பேரும் திருடி இருந்தனர்.

ரூ.40 லட்சம் தங்க சங்கிலிகள்

பின்னர் அந்த மோட்டார் சைக்கிள்களின் நம்பர் பிளேட்டை மாற்றியுள்ளனர். அவற்றில் ஒரு மோட்டார் சைக்கிளை தமிழ்நாட்டுக்கு ஓட்டிச் சென்று, அங்கு தனியாக நடந்து செல்லும் பெண்களிடம் கத்தியை காட்டி மிரட்டி தங்க நகைகளை கொள்ளையடித்து வந்துள்ளனர். அதுபோல, மற்றொரு மோட்டார் சைக்கிளை பெங்களூருவில் வைத்து கொண்டு வலம் வந்துள்ளனர். அவ்வாறு பெங்களூருவில் வலம் வரும் போது தனியாக நடந்து செல்லும் பெண்களை பின்தொடர்ந்து சென்று, அவர்களை கத்தி முனையில் மிரட்டி தங்க சங்கிலிகளை கொள்ளையடிப்பதை அருண்குமாரும், கார்த்திக்கும் தொழிலாக வைத்திருந்தது தெரியவந்துள்ளது. கைதான 2 பேரும் கொடுத்த தகவலின் பேரில் பல்வேறு பெண்களை மிரட்டி கொள்ளையடித்த ரூ.40 லட்சம் மதிப்பிலான தங்க சங்கிலிகள் மீட்கப்பட்டுள்ளன. பெண்களிடம் கொள்ளையடிக்கும் தங்க சங்கிலியை பொம்மசந்திராவில் வசிக்கும் ஜெயக்குமாரிடம் 2 பேரும் கொடுத்து வந்தனர். அவர் தனது மனைவி மூலம் தங்க சங்கிலியை விற்று வந்ததும் தெரியவந்தது. இதையடுத்து, ஜெயக்குமாரையும் கே.ஜி.நகர் போலீசார் கைது செய்துள்ளனர். ஜெயக்குமாரின் சொந்த ஊரும் தமிழ்நாடு ஆகும். இவர்கள் கைது செய்திருப்பதன் மூலம் பெங்களூரு மற்றும் தமிழ்நாட்டில் உள்ள போலீஸ் நிலையங்களில் பதிவாகி இருந்த 37 வழக்குகளில் தீர்வு காணப்பட்டு உள்ளது.

இவ்வாறு துணை போலீஸ் கமிஷனர் அண்ணாமலை கூறினார்.

அண்ணாமலை பார்வையிட்டார்

முன்னதாக கைதான நபர்களிடம் இருந்து மீட்கப்பட்ட தங்க சங்கிலிகள் பெங்களூரு தெற்கு மண்டல துணை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் வைக்கப்பட்டு இருந்தது. அந்த தங்க சங்கிலிகளை துணை போலீஸ் கமிஷனர் அண்ணாமலை பார்வையிட்டார்.

Next Story