65 லட்சம் குழந்தைகளுக்கு வழங்கப்படுகிறது கர்நாடகத்தில் வருகிற 10-ந் தேதி போலியோ சொட்டு மருந்து முகாம் மந்திரி சிவானந்தபட்டீல் பேட்டி


65 லட்சம் குழந்தைகளுக்கு வழங்கப்படுகிறது கர்நாடகத்தில் வருகிற 10-ந் தேதி போலியோ சொட்டு மருந்து முகாம் மந்திரி சிவானந்தபட்டீல் பேட்டி
x
தினத்தந்தி 8 March 2019 4:00 AM IST (Updated: 8 March 2019 3:13 AM IST)
t-max-icont-min-icon

கர்நாடகத்தில் வருகிற 10-ந் தேதி போலியோ சொட்டு மருந்து முகாம் நடத்தப்படுகிறது.

பெங்களூரு, 

கர்நாடகத்தில் வருகிற 10-ந் தேதி போலியோ சொட்டு மருந்து முகாம் நடத்தப்படுகிறது. இதில் 65 லட்சம் குழந்தைகளுக்கு சொட்டு மருந்து வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக மந்திரி சிவானந்தபட்டீல் கூறினார்.

மரணமும் நிகழ்கிறது

கர்நாடக சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை மந்திரி சிவானந்தபட்டீல் பெங்களூருவில் நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-

போலியோ, குழந்தைகளுக்கு தீவிரமான நோயை உண்டாக்குகிறது. இதன் மூலம் மரணமும் நிகழ்கிறது. 2011-ம் ஆண்டு மேற்குவங்கத்தில் போலியோ தாக்கி இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதுவே கடைசியாக கண்டுபிடிக்கப்பட்ட போலியோ நோய் தாக்குதல் ஆகும்.

போலியோ பாதிப்பு இல்லாத...

கடந்த 2014-ம் ஆண்டு உலக சுகாதார நிறுவனம், இந்தியா ேபாலியோ பாதிப்பு இல்லாத நாடு என்று அறிவித்தது. சமீபத்தில் ஆப்கானிஸ்தானில் 2 பேருக்கும் மற்றும் பாகிஸ்தானில் 4 பேருக்கும் போலியோ நோய் தாக்கி இருப்பது தெரியவந்தது.

இதனால் இந்தியாவுக்குள் இந்த போலியோ நோய் தொற்று பரவ வாய்ப்புள்ளது. எனவே முன்எச்சரிக்கை நடவடிக்கையாக வருகிற 10-ந் தேதி போலியோ சொட்டு மருந்து முகாம் கர்நாடகத்தில் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

மக்கள் அதிகம் கூடும் இடங்கள்

மருத்துவமனைகள், பஸ் நிலையங்கள், மக்கள் அதிகம் கூடும் இடங்கள், கிராமங்கள் என மொத்தம் 32 ஆயிரத்து 572 போலியோ சொட்டு மருந்து முகாம்கள் அமைக்கப்படுகின்றன. இதுதவிர, 51 ஆயிரத்து 918 குழுக்கள் இந்த பணியில் ஈடுபடும்.

1 லட்சத்து 10 ஆயிரத்து 351 ஊழியர்கள் இந்த பணியில் ஈடுபடுகிறார்கள்.

மேற்பார்வையாளர்கள் 7,827 பேரும் இந்த பணியில் ஈடுபடுகிறார்கள். 2,481 நடமாடும் போலியோ சொட்டு மருந்து வழங்கும் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. இதற்காக 96 லட்சம் சொட்டு மருந்து தயாராக வைக்கப்பட்டுள்ளது.

65 லட்சம் குழந்தைகள்

5 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு இந்த சொட்டு மருந்து வழங்கப்படுகிறது. கர்நாடகத்தில் சுமார் 65 லட்சம் குழந்தைகளுக்கு இந்த சொட்டு மருந்து வழங்கப்படுகிறது.

இதற்கு முன்பு குழந்தைகளுக்கு எத்தனை முறை சொட்டு மருந்து போட்டிருந்தாலும், இந்த முறை போலியோ சொட்டு மருந்து அவசியம் போட வேண்டும்.

இவ்வாறு சிவானந்தபட்டீல் கூறினார்.

Next Story