5 ரூபாய்க்கு சத்தான உணவு கட்டுமான தொழிலாளருக்கு புதிய திட்டம் முதல்-மந்திரி பட்னாவிஸ் தொடங்கி வைத்தார்
மராட்டியத்தில் கட்டுமான தொழிலாளர்களுக்கு 5 ரூபாய்க்கு சத்தான உணவு வழங்கும் திட்டத்தை முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் தொடங்கி வைத்தார்.
மும்பை,
நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு பல்வேறு திட்டங்கள் தொடங்கி வைக்கப்படுவதுடன், புதிய அறிவிப்புகளும் வெளியிடப்படுகிறது.
புதிய திட்டம்
இந்தநிலையில் நாக்பூரில் மெட்ரோ ரெயில் சேவையை நேற்று காணொலி காட்சி மூலம் பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். இதில், மராட்டிய முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிஸ், மத்திய மந்திரி நிதின் கட்காரி உள்ளிட்ட தலைவர்கள் கலந்து கொண்டனர்.
இதனையடுத்து மராட்டியத்தில் கட்டுமான தொழிலாளர்களுக்கு மலிவு விலையில் உணவு வழங்கும் ‘அடல் ஆகர் யோஜனா’ என்ற திட்டத்தை முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் தொடங்கி வைத்தார்.
விழாவில் அவர் பேசியதாவது:-
ரூ.5-க்கு உணவு
இந்த திட்டத்தின் மூலம் கட்டுமான தொழிலாளர்களுக்கு 5 ரூபாயில் சத்தான மற்றும் சுகாதாரமான உணவு வழங்கப்படும். முதல் கட்டமாக மாநிலத்தில் 20 ஆயிரம் தொழிலாளர்களுக்கு இந்த மலிவு விலை உணவு கிடைக்கும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
கிட்டத்தட்ட 10 லட்சம் தொழிலாளர்கள் தங்களது பெயர்களை தொழிலாளர் நல வாரியத்தில் பதிவு செய்துள்ளனர். பெயர்களை பதிவு செய்யும் பணியோடு மட்டும் நாங்கள் நின்று விடுவதில்லை. அவர்களுக்கு அனைத்து நலத்திட்ட பலன்களும் கிடைக்க முயற்சி செய்து வருகிறோம்.
அடல் ஆகர் யோஜனா திட்டத்தின் கீழ் உயிர் கொடுத்து உழைக்கும் தொழிலாளர்கள் அனைவருக்கும் மலிவு விலையில் சத்தான உணவு வழங்குவோம். இதற்காக இந்த திட்டம் மேலும் விரிவு செய்யப்படும்.
வேலை செய்யும் இடத்துக்கே...
இந்த திட்டம் மூலம் பதிவு செய்த அனைத்து தொழிலாளர்களுக்கும் வேலை செய்யும் இடத்திலேயே மலிவு விலையில் உணவு கிடைக்க ஏற்பாடு செய்துள்ளோம்.
இந்த திட்டம் வருங்காலத்தில் உழைப்பாளர்களின் உயிர் காக்கும் திட்டமாக உருவெடுக்கும்.
இந்த அரசாங்கம் கட்டுமான தொழிலாளர்களுக்கு கல்வி, வருமானம் மற்றும் ஆரோக்கியத்துக்கு அனைத்து உதவிகளையும் செய்யும்.
மானிய விலை வீடுகள்
ஏற்கனவே 4 லட்சத்து 50 ஆயிரம் கட்டுமான தொழிலாளர்களுக்கு மானிய விலையில் வீடு கட்டி கொடுத்துள்ளோம். சரமேவ் ஜயந்த் யோஜனா திட்டத்தின் கீழ் 60 வயதுக்கு மேற்பட்ட கட்டுமான தொழிலாளர்களுக்கு பென்சன் தொகையாக மாதந்தோறும் 3 ஆயிரம் வழங்கும் திட்டமும் தொடங்கப்பட்டு உள்ளது.
பென்சன் பெறும் கட்டுமான தொழிலாளர்கள் இறந்து விட்டாலும் கூட அவர்களது மனைவிக்கு அந்த தொகை வழங்கப்படும். இந்த திட்டத்தின் கீழ் 2 லட்சத்து 50 ஆயிரம் பேர் தங்களது பெயர்களை பதிவு செய்துள்ளனர்.
இவ்வாறு அவர் பேசினார்.
Related Tags :
Next Story