நெல்லையில் ஆம்னி பஸ்கள் நிறுத்த தனியாக இடம் ஒதுக்க வேண்டும் - சங்க நிர்வாகிகள் பேட்டி


நெல்லையில் ஆம்னி பஸ்கள் நிறுத்த தனியாக இடம் ஒதுக்க வேண்டும் - சங்க நிர்வாகிகள் பேட்டி
x
தினத்தந்தி 8 March 2019 4:33 AM IST (Updated: 8 March 2019 4:33 AM IST)
t-max-icont-min-icon

நெல்லையில் ஆம்னி பஸ்கள் நிறுத்த தனியாக இடம் ஒதுக்க வேண்டும் என நெல்லை மாநகர ஆம்னி பஸ் உரிமையாளர்கள் சங்கம் மற்றும் ஏஜெண்டுகள் நல்வாழ்வு சங்க நிர்வாகிகள் தெரிவித்தனர். இந்த சங்கத்தின் தலைவர் உலகநாதன், செயலாளர் சிவா, துணை தலைவர் மணி, பொருளாளர் ஜெயப்பிரகாஷ் ஆகியோர் நெல்லையில் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது:-

நெல்லை,

நெல்லை சந்திப்பு பஸ் நிலையத்தில் புதிய பஸ்நிலையம் கட்டப்பட்டு வருவதால், மாநகராட்சி அனுமதியுடன் நெல்லை வண்ணார்பேட்டை புறவழிச்சாலை பகுதியில் அனைத்து ஆம்னி பஸ்களும் நின்று செல்கின்றன. அங்கு பயணிகளை ஏற்றி, இறக்கி வருகிறோம்.

ஆம்னி பஸ்கள் நிறுத்துவ தற்கு என தனியாக இடம் கிடையாது. நிரந்தரமான இடம் அரசிடம் கேட்டு இருக்கிறோம். நெல்லை புதிய பஸ் நிலையம் அருகே இடம் ஒதுக்கி தருவதாக மாவட்ட நிர்வாகத்திடமும், மாநகராட்சி நிர்வாகத்திடம் கேட்டு இருக்கிறோம். அதற்கு அவர்களும் இட ஒதுக்கி தர சம்மதம் தெரிவித்துள்ளனர். எனவே ஆம்னி பஸ்களை நிறுத்த தனியாக இடம் ஒதுக்க வேண்டும்.

இந்த நிலையில் நெல்லை புதிய பஸ் நிலையம் அருகே உள்ள ஒரு ஓட்டல் முன்பு ஆம்னி பஸ்கள் நின்று செல்ல ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளதாக சமூக வலைதளங்களில் செய்திகள் பரப்பப்பட்டு வருகின்றன. இது தவறான தகவல்கள் ஆகும். தனிநபர் இடத்தில் ஆம்னி பஸ்கள் வந்து செல்வதை நாங்கள் அனுமதிக்க மாட்டோம். அரசு ஒதுக்கி தரும் இடத்தில் தான் ஆம்னி பஸ்களை நிறுத்துவோம். தவறான தகவல்களை பரப்பியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினர். 

Next Story