ஆன்மிக விரதத்தால் ஒருநாள் மூடப்பட்ட விமான நிலையம்


ஆன்மிக விரதத்தால் ஒருநாள் மூடப்பட்ட விமான நிலையம்
x
தினத்தந்தி 9 March 2019 3:45 AM IST (Updated: 8 March 2019 2:45 PM IST)
t-max-icont-min-icon

இந்தோனேசியாவின் பாலி தீவில் உள்ள சர்வதேச விமான நிலையம், இந்து சமூகத்தினரின் ஆன்மிக விரதம் காரணமாக ஒருநாள் மூடப்பட்டது.

இந்தோனேசியாவில் சுற்றுலாப் பயணிகள் அதிகம் வருகைதரும் பாலியில் உள்ள சர்வதேச விமான நிலையம் கடந்த 7-ம் தேதி செயல்படாது என்று அந்நாட்டு அரசு அறிவித்தது. அன்றைய தினம் காலை 6 மணி முதல் 24 மணி நேரத்துக்கு சர்வதேச விமானச் சேவைகள் உட்பட 468 விமானச் சேவைகள் ரத்து செய்யப்பட்டன.

இஸ்லாமிய நாடான இந்தோனேசியாவின் பாலி தீவில் இந்துக்கள் அதிகம் வசிக்கின்றனர். கடந்த 7-ம் தேதி, ‘நியபி’ எனப்படும் ஆன்மிக மவுன விரதத்தை அவர்கள் மேற்கொண்டனர்.

அதற்கு மதிப்பளித்துத்தான், விமான நிலையத்தை ஒருநாள் மூடும் முடிவு எடுக்கப்பட்டது.

விரத நாளில் அங்கு வசிக்கும் இந்துக்கள் உணவருந்தாமல் இருப்பதுடன், தியானமும் செய்வார்கள். குறிப்பிட்ட நாள் முழுவதும் அவர்கள், மின்சாரம், தீ மற்றும் மின்னணுப் பொருட்களைப் பயன்படுத்துவதில்லை.

Next Story