எப்போதும் பதற்றமாக இருக்கும் ‘எல்லைக் கட்டுப்பாட்டுக் கோடு’


எப்போதும் பதற்றமாக இருக்கும் ‘எல்லைக் கட்டுப்பாட்டுக் கோடு’
x
தினத்தந்தி 9 March 2019 3:30 AM IST (Updated: 8 March 2019 4:55 PM IST)
t-max-icont-min-icon

இந்தியா-பாகிஸ்தான் இடையிலான எல்லைக் கட்டுப்பாட்டுக்கோடு உச்ச பதற்றத்தில் இருந்து வருகிறது.

இந்தியா-பாகிஸ்தான் இடையிலான உரசல் காரணமாக, ‘எல்.ஓ.சி.’ எனப்படும் எல்லைக் கட்டுப்பாட்டுக்கோடு சமீப நாட்களாக உச்ச பதற்றத்தில் இருந்து வருகிறது.

இப்போது என்றில்லை, எப்போதுமே இந்தப் பகுதி பரபரப்பாய்த்தான் இருக்கும்.

இந்தியா-பாகிஸ்தான் இடையிலான ‘லட்சுமண் ரேகை’யான எல்லைக் கட்டுப்பாட்டுக் கோடு பற்றிய முக்கிய விவரங்களைப் பார்க்கலாம்...

சுதந்திரம் பெற்ற உடனே ஜம்மு-காஷ்மீரை மையமாக வைத்து இந்தியாவும் பாகிஸ்தானும் சண்டையிட்டுக் கொண்டன. இந்தப் பிரச்சினையை விசாரிக்கவும், மத்தியஸ்தம் செய்யவும் இந்தியா- பாகிஸ்தானுக்கான ஐ.நா. கமிஷனை உருவாக்குவதற்கான தீர்மானம் எண் 38 (1948)-ஐ ஐ.நா. 1948-ம் ஆண்டு ஏற்றுக்கொண்டது. ராணுவப் பார்வையாளர்கள் மேற்பார்வையில், போர் நிறுத்த எல்லைக்கோட்டை உருவாக்கிக்கொள்வதற்கான கராச்சி ஒப்பந்தத்தில் 1949-ம் ஆண்டு இந்தியாவும் பாகிஸ்தானும் கையெழுத்திட்டன.

மீண்டும் இந்தியாவும் பாகிஸ்தானும் 1971-ம் ஆண்டு இன்னொரு முறை போரிட்டன. அதன் பின்னால் சிம்லா ஒப்பந்தம் கையெழுத்தானது. இரு தரப்பும் பேச்சு நடத்தி, 1949-ம் ஆண்டின் போர் நிறுத்த எல்லைக்கோட்டில் சில பரஸ்பர மாறுதல்களை செய்து அதனை கட்டுப்பாட்டுக் கோடாக ஏற்றுக்கொண்டன.

ஜம்மு-காஷ் மீரில் இந்த கட்டுப்பாட்டு எல்லைக் கோடு 740 கி.மீ. நீளம் செல்கிறது. இந்தியா, பாகிஸ்தான் நாடுகளைச் சேர்ந்த ஆயிரக் கணக்கான ராணுவ வீரர்கள் எல்லைக்கோட்டின் இரு பக்கங்களிலும் நிறுத்தப்பட்டுள்ளனர். பனி படர்ந்த மலைகள் ஊடாக இக்கோடு செல்வது குறிப்பிடத்தக்கது.

1972-ம் ஆண்டு இந்திய- பாகிஸ்தான் ஒப்பந்தத்தின்படி இரு நாட்டின் சார்பில் நியமிக்கப்பட்ட ராணுவ அதிகாரிகள், இந்த கட்டுப்பாட்டு எல்லைக்கோட்டின் தென்முனையாக ‘சங்கம்’ என்ற இடத்தைத் தீர்மானித்தனர். ‘பாயிண்ட் என்ஜே 9842’ என்ற இடத்தை அவர்கள் இந்தக் கோட்டின் வடக்கு எல்லையாகவும் அடையாளம் காட்டினர். ஜம்மு பகுதியில் இந்தக் கோடு பூஞ்ச், ரஜவுரி ஆகிய இடங்களின் வழியாகவும், காஷ்மீர் பள்ளத்தாக்கில் குப்வாரா, உரி வழியாகவும் செல்கிறது.

எல்லைக் கட்டுப்பாட்டு பகுதியின் இரு பக்கமும் ஆண்டுக்கு நூற்றுக்கணக்கான முறை துப்பாக்கிச் சூடு நடக்கிறது. கடந்த 1990-ம் ஆண்டு எல்லைக் கட்டுப்பாட்டு கோட்டுப் பகுதியில் வேலிகள் போடும் பணியை இந்தியா தொடங்கியது. இது ஒருபுறம் இருந்தாலும், 2003-ம் ஆண்டு இரு நாடுகள் இடையே அமைதி ஒப்பந்தம் கையெழுத்தானதும் 2013-ம் ஆண்டுவரை இரு தரப்பிடையே சண்டைகள் குறைந்தன.

ஆனால், 2013-க்குப் பின் எல்லை கட்டுப்பாட்டு பகுதியில் சண்டைகள் அதிகரித்தன. 2004-ம் ஆண்டிலேயே இந்திய ராணுவப் பொறியாளர்கள் எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டின் பெரும் பகுதியில் வேலிகளை அமைத்துவிட்டனர்.

இந்த 740 கி.மீ. நீள எல்லை கட்டுப்பாட்டுக் கோடு, அதிகாரப்பூர்வ சர்வதேச எல்லைப் பகுதி அல்ல. இந்தியப் படைகள் கட்டுப்பாட்டு கோட்டின் இந்தியப் பகுதியில் இருக்கும். பாகிஸ்தான் படைகள் தங்கள் கட்டுப்பாட்டில் உள்ள காஷ்மீர் பகுதியில் நிற்கும்.

Next Story