அட்டையில் கலைவண்ணம்
கார்ட்போர்டு அட்டைகளை கொண்டு அழகிய டிசைன்களில் கட்டமைக்கப்பட்டிருக்கும் உணவகம் மும்பையில் இயங்கி கொண்டிருக்கிறது.
பொருட்களை பேக்கிங் செய்வதற்காக பயன்படுத்தப்பட்டு பின்பு தூக்கி வீசப்படும் அட்டைகளுக்கு இவ்வளவு நேர்த்தியுடன் மறு உருவம் கொடுக்க முடியுமா? என்று ஆச்சரிப்பட வைக்கும் அளவுக்கு அந்த உணவகத்தின் அனைத்து பகுதிகளும் கார்ட்போர்டு அட்டைகளால் பிரகாசித்துக்கொண்டிருக்கின்றன. சிறிய கார்ட்போர்டு அட்டைகளை ஒன்றன் மேல் ஒன்றாக அடுக்கிவைக்கப்பட்டதுபோல் நீள்வாக்கில் இருக்கைகள் அமைக்கப்பட்டிருக்கின்றன. அவை கார்ட்போர்டு அட்டைகள்தானா? என்று புருவத்தை உயர்த்தும் அளவிற்கு அழகிய டிசைன்களை உருவாக்கி இருக்கிறார்கள்.
அட்டைகளின் உள்பகுதியில் இருக்கும் சிறிய லேயர்கள் அடுக்குகளாக மாறி இருக்கைக்கு மாறுபட்ட தோற்றத்தை ஏற்படுத்தி கொடுக்கின்றன. பாலைவனப் பகுதியில் மணல் பரப்பு அடுக்கடுக்காக பரந்து விரிந்து காட்சி அளிப்பது போலவே இந்த அட்டைகளும் கவனம் ஈர்க்கின்றன. அறைக்குள் தொங்க விடப்பட்டிருக்கும் விளக்குகளிலும் கார்ட் போர்டு அட்டையில் கலைவண்ணம் காட்டியிருக்கிறார்கள். மேஜை, இருக்கைகளில் தண்ணீர் பட்டாலும் பாதிப்பு ஏற்படாத வகையில் அட்டைகளை மறு சுழற்சி செய்து பயன்படுத்தி இருக்கிறார்கள். சுற்றுப்புற பகுதியில் இருந்து வரும் சத்தங்களை பிரதிபலிக்காமல் உள்வாங்கி கொள்ளும் விதமாகவும் அமைக்கப்பட்டிருக்கிறது. குளிர்காலம் மற்றும் கோடைகாலத்துக்கும் ஈடு கொடுக்கும் வகையிலும், 50 சதவீதம் காற்றை உள்வாங்கி இதமான சூழலை ஏற்படுத்தும் வகையிலும் இருக்கிறது. அங்கு தயாரிக்கப்படும் உணவு வகைகளின் பட்டியல் அடங்கிய ‘மெனு கார்டும்’ கார்ட்போர்டு அட்டைகளில்தான் வழங்கப்படுகின்றது.
கட்டிட வடிவமைப்பாளர் நூரு கரீம் கைவண்ணத்தில் இந்த உணவகம் உருவாக்கப்பட்டுள்ளது. மாறுபட்ட கண்ணோட்டத்தில் ரசிக்கும் விதமாக புதுமையான அம்சங்களை புகுத்தி இருக்கிறார். சமையல் மேடை உள்பட உணவகத்தின் அனைத்து பகுதிகளிலும் கார்ட்போர்டு அட்டைகள்தான் ஜொலித்துக்கொண்டிருக்கின்றன. மும்பையில் உள்ள பந்த்ரா குர்லா காம்ப்ளக்சில் அமைந்திருக்கும் இதுதான் கார்ட்போர்டு அட்டைகளை கொண்டு உருவாக்கப்பட்ட ‘இந்தியாவின் முதல் கபே’ என்ற சிறப்பையும் பெற்றிருக்கிறது.
Related Tags :
Next Story