குடியாத்தம் நகராட்சியில் ரூ.2¾ கோடியில் குடிநீர் இணைப்புகள், துப்புரவு வாகனங்கள் அமைச்சர் கே.சி.வீரமணி தொடங்கி வைத்தார்
குடியாத்தம் நகராட்சியில் ரூ.2¾ கோடியில் குடிநீர் இணைப்புகள், துப்புரவு வாகனங்கள் துப்புரவு பணியாளர்களுக்கு பேட்டரியில் இயங்கும் 3 சக்கர வாகனங்களை வழங்கி அமைச்சர் கே.சி.வீரமணி பேசினார்.
குடியாத்தம்,
குடியாத்தம் நகராட்சியில் ஒருங்கிணைந்த நகர்புற உள்கட்டமைப்பு மேம்பாடு திட்டத்தின்கீழ் ரூ.2 கோடியே 30 லட்சம் மதிப்பில் 6,550 குடிநீர் இணைப்புகளை தவணை முறையில் வைப்புத்தொகை செலுத்தும் திட்டத்தின்கீழ் பொதுமக்களுக்கு வழங்குதல், ரூ.57 லட்சத்து 60 ஆயிரம் மதிப்பீட்டில் தூய்மை இந்தியா திட்டத்தின்கீழ் திடக்கழிவு மேலாண்மை பணிகளுக்கு துப்புரவு பணியாளர்களுக்கு குப்பைகளை சேகரிக்க பேட்டரியால் இயங்கும் 32 மூன்று சக்கர வாகனங்களை வழங்குதல், நகரை தூய்மைப்படுத்தும் பணிகளை தொடங்குதல் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு கலெக்டர் எஸ்.ஏ.ராமன் தலைமை தாங்கினார். ஜி.லோகநாதன் எம்.எல்.ஏ., டி.சி.எம்.எஸ் தலைவர் ஜெ.கே.என்.பழனி, ஆவின் தலைவர் த.வேலழகன், வேலூர் மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் வி.ராமு, முன்னாள் நகரசபை தலைவர்கள் எஸ்.அமுதா, எம்.பாஸ்கர், முன்னாள் கவுன்சிலர் ஆர்.மூர்த்தி உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர். நகராட்சி ஆணையாளர் எஸ்.செல்வபாலாஜி வரவேற்றார்.
சிறப்பு அழைப்பாளராக அமைச்சர் கே.சி.வீரமணி கலந்து கொண்டு குடிநீர் குழாய் இணைப்புகளை தொடங்கி வைத்து, பொதுமக்களிடம் குடிநீர் குழாய் இணைப்பிற்கான தவணை முறை திட்டத்திற்கான விண்ணப்பங்களை பெற்றார். பின்னர் அவர் செதுக்கரை பகுதியில் கழிவுநீர் கால்வாய் தூர்வாரும் பணிகளை பார்வையிட்டார். தொடர்ந்து துப்புரவு பணியாளர்களுக்கு பேட்டரியில் இயங்கும் 3 சக்கர வாகனங்களை வழங்கி பேசினார்.
இதில் தாசில்தார் பி.எஸ்.கோபி, மேலாளர் சூரியபிரகாஷ், கூட்டுறவு வங்கி நிர்வாகிகள் எஸ்.என்.சுந்தரேசன், டி.கோபி, எஸ்.சிவக்குமார், இ.ரகுராமன் உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் நகராட்சி பொறியாளர் ஜி.உமாமகேஸ்வரி நன்றி கூறினார். நிகழ்ச்சிகளை மக்கள் தொடர்பு அலுவலர் எம்.துரைசாமி தொகுத்து வழங்கினார்.