சேலம் கலெக்டர் அலுவலகத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த தொழிலாளி சிக்கினார்
சேலம் கலெக்டர் அலுவலகத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த தொழிலாளி போலீசில் சிக்கினார்.
சேலம்,
சென்னை காவல் கட்டுப்பாட்டு அறைக்கு நேற்று முன்தினம் ஒரு தொலைபேசி அழைப்பு வந்தது. அதில் பேசிய மர்ம நபர், சேலம் கலெக்டர் அலுவலகத்தில் வெடிகுண்டு வைக்கப்பட்டு உள்ளது. சிறிது நேரத்தில் வெடிக்கும் எனக்கூறி விட்டு இணைப்பை துண்டித்துவிட்டார். இதையொட்டி சென்னை காவல் கட்டுப்பாட்டு அறை அதிகாரிகள், சேலம் மாநகர போலீசாரை தொடர்பு கொண்டு கலெக்டர் அலுவலகத்தில் வெடிகுண்டு வைக்கப்பட்டு உள்ளதாக தகவல் வந்து உள்ளது. எனவே அங்கு சோதனை நடத்துமாறு உத்தரவிட்டனர்.
சேலம் டவுன் உதவி கமிஷனர் ஈஸ்வரன், இன்ஸ்பெக்டர் சரவணன், சேலம் மாநகர வெடிகுண்டு கண்டுபிடிப்பு மற்றும் தடுப்பு பிரிவு இன்ஸ்பெக்டர் எட்வர்ட் தலைமையிலான போலீசார், மோப்பநாயுடன் கலெக்டர் அலுவலக வளாகத்தில் சோதனை நடத்தினர். இதில் வெடிகுண்டு எதுவும் சிக்கவில்லை. அது புரளி என்பது தெரியவந்தது. இதையொட்டி காவல் கட்டுப்பாட்டு அறைக்கு வந்த தொலைபேசி எண்ணை வைத்த வெடிகுண்டு மிரட்டல் விடுத்தவர் யார்? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தினர்.
விசாரணையில், சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே உள்ள பூசாரிப்பட்டியை சேர்ந்த மணிவண்ணன் (வயது 30) என்பதும், இவர் தறித்தொழிலாளி என்பதும் தெரியவந்தது. இதையொட்டி அவரை பிடித்து விசாரித்தனர். அப்போது அவர் போலீசாரிடம் கூறுகையில், சேலத்தை சேர்ந்த ஒருவர் என்னிடம் பணம் மோசடி செய்து விட்டார். மேலும் பல்வேறு நகைக்கடையில் சீட்டு போட்டேன். ஆனால் கட்டிய பணம் திரும்ப கிடைக்க வில்லை. எனவே எனது பணத்தை மீட்டுத்தரும் படி சேலம் மாவட்ட குற்றப்பிரிவு போலீசில் புகார் கூறினேன். ஆனால் உரிய நடவடிக்கை எடுக்க வில்லை.
இதனால் என்னை ஏமாற்றியவரை போலீசில் சிக்க வைப்பதற்காக, அவர் பேசுவது போன்று கலெக்டர் அலுவலகத்தில் வெடிகுண்டு வைத்து இருப்பதாக மிரட்டல் விடுத்தேன் என்று கூறினார். மேலும் குடிபோதையில் இருந்ததால் இந்த தவறு செய்து விட்டேன் என்றும் தெரிவித்துள்ளார். தொடர்ந்து போலீசார் மணிவண்ணனிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.