நாகர்கோவில் அருகே 2 குழந்தைகளின் தந்தை, ரெயில் முன் பாய்ந்து தற்கொலை
நாகர்கோவில் அருகே 2 குழந்தைகளின் தந்தை ரெயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார்.
நாகர்கோவில்,
இந்த சம்பவம் பற்றி போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-
திருவட்டார் திருவரம்பு செம்மாந்துறையை சேர்ந்தவர் பிரைட்சிங் (வயது 42), அப்பகுதியில் உள்ள ஒரு தேவாலயத்தில் ஊழியராக பணியாற்றி வந்தார். இவருக்கு விஜி என்ற மனைவியும், 2 குழந்தைகளும் உள்ளனர். இவர் கடந்த சில மாதங்களாக நோயால் அவதிப்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. இதற்காக சிகிச்சைகள் மேற்கொண்டுள்ளார். ஆனால் குணமாகவில்லை. இதனால் அவர் மனவேதனையில் காணப்பட்டு வந்தார்.
இந்த நிலையில் பிரைட்சிங் நேற்று நாகர்கோவில் அருகே தோவாளை-ஆரல்வாய்மொழி இடையே குருசடி பாலத்தின் அருகில் உள்ள ரெயில் தண்டவாளத்தில் உடல் சிதறிய நிலையில் பிணமாக கிடந்தார். இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த அப்பகுதி மக்கள் உடனே ரெயில்வே போலீசுக்கு தகவல் தெரிவித்தனர்.
அதன் பேரில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ராஜசேகரன் தலைமையில் போலீசார் அங்கு விரைந்து சென்று பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பினர்.
பின்னர் போலீசார் நடத்திய விசாரணையில், வெளியூருக்கு செல்வதாக வீட்டில் கூறிவிட்டு வந்த பிரைட்சிங் திடீரென ரெயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. அவர் வீட்டில் இருந்து மோட்டார் சைக்கிளில் வந்துள்ளார். பின்னர் மோட்டார் சைக்கிளை ரெயில் தண்டவாளத்தின் அருகே நிறுத்தி விட்டு தற்கொலை செய்துள்ளார். இதற்கிடையே பிரைட்சிங் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அவருடைய உறவினர்களுக்கு தெரிவிக்கப்பட்டது.
அதைத் தொடர்ந்து அவர்கள் ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு ஓடோடி வந்தனர். பிரைட்சிங்கின் உடலை பார்த்து அவர்கள் கதறி அழுத காட்சி பரிதாபமாக இருந்தது. மேலும் இச்சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். 2 குழந்தைகளின் தந்தை ரெயில் முன் பாய்ந்து தற்கொலை செய்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.
Related Tags :
Next Story