அருமனை அருகே பள்ளிக்கூடத்துக்கு சுற்றுச்சுவர் கட்ட பொதுமக்கள் எதிர்ப்பு பணியை தடுத்து நிறுத்தியதால் பரபரப்பு


அருமனை அருகே பள்ளிக்கூடத்துக்கு சுற்றுச்சுவர் கட்ட பொதுமக்கள் எதிர்ப்பு பணியை தடுத்து நிறுத்தியதால் பரபரப்பு
x
தினத்தந்தி 9 March 2019 4:15 AM IST (Updated: 8 March 2019 9:29 PM IST)
t-max-icont-min-icon

அருமனை அருகே பள்ளிக்கூடத்துக்கு சுற்றுச்சுவர் கட்டும் பணியை பொதுமக்கள் தடுத்து நிறுத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.

அருமனை, 

அருமனை அருகே மாத்தூர்கோணத்தில் அரசு தொடக்கப்பள்ளி உள்ளது. இந்த பள்ளி வளாகத்தின் ஒரு பகுதியில் பொதுமக்கள் வசதிக்காக பாதை அமைக்கப்பட்டுள்ளது. அந்த பாதையை சுற்றுவட்டார மக்கள் பயன்படுத்தி வருகிறார்கள்.

இந்த நிலையில் பள்ளியை சுற்றிலும் சுற்றுச்சுவர் கட்ட அரசு சார்பில் நிதி ஒதுக்கப்பட்டது. அதன்படி சுற்றுச்சுவர் கட்டும் பணி நேற்று தொடங்கியது. இதற்காக பொக்லைன் எந்திரம் மூலம் நிலத்தை தோண்டும் பணியில் தொழிலாளர்கள் ஈடுபட்டனர். அப்போது, பள்ளி வளாகத்தில் பொதுமக்கள் பயன்படுத்தும் பாதையை அடைத்து சுற்றுச்சுவர் கட்ட முயன்றதாக தெரிகிறது.

இதுகுறித்து தகவல் அறிந்த சுற்றுவட்டாரத்தில் உள்ள பொதுமக்கள் அங்கு கூடினர். அவர்கள் பாதையை அடைத்து சுற்றுச்சுவர் கட்டுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து பணியை தடுத்து நிறுத்தினர். பொதுமக்களுக்கு ஆதரவாக காங்கிரஸ் தலைவர் ஜெயராஜ், பா.ஜனதா முன்னாள் ஒன்றிய தலைவர் சுரேஷ் சந்திரன் மற்றும் நிர்வாகிகள் சம்பவ இடத்திற்கு சென்று ஒப்பந்தக்காரரிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது, இதுதொடர்பாக சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் பேசி முடிவு செய்தபின்பு பணி செய்வதாக ஒப்பந்தக்காரர் கூறினார். இதையடுத்து பொக்லைன் எந்திரத்துடன் தொழிலாளர்கள் திரும்பி சென்றனர். இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Next Story