உளுந்து பயிரை ஆடுகள் மேய்ந்ததை தட்டிக்கேட்ட விவசாயிக்கு அரிவாள் வெட்டு கணவன்-மனைவி கைது
மயிலாடுதுறை அருகே உளுந்து பயிரை ஆடுகள் மேய்ந்ததை தட்டிக்கேட்ட விவசாயிக்கு அரிவாள் விட்டு விழுந்தது. இதுகுறித்து கணவன்- மனைவியை போலீசார் கைது செய்தனர்.
குத்தாலம்,
நாகை மாவட்டம், மயிலாடுதுறை அருகே நல்லாடை காருகுடி கீழத்தெருவை சேர்ந்தவர் சேகர் (வயது 52). விவசாயி. அதே பகுதியை சேர்ந்தவர் மனோகர் (52). இவருடைய மனைவி கவிதா (38). சேகர், தனக்கு சொந்தமான வயலில் உளுந்து பயிரிட்டுள்ளார். இந்த உளுந்து பயிரை சம்பவத்தன்று மனோகருக்கு சொந்தமான ஆடுகள் மேய்ந்துள்ளன.
இதுகுறித்து அங்கு ஆடுகளை மேய்த்து கொண்டிருந்த மனோகரின் மனைவி கவிதாவை, சேகர் தட்டிக்கேட்டார். இதில் கவிதாவிற்கும், சேகருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது அங்கு வந்த மனோகரும், கவிதாவும் சேர்ந்து சேகரை தாக்கியதாக தெரிகிறது. மேலும் மனோகர், தான் வைத்திருந்த அரிவாளால் சேகரை வெட்டினார்.
இதில் பலத்த காயம் அடைந்த சேகரை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். இதுகுறித்து சேகர் கொடுத்த புகாரின்பேரில் பெரம்பூர் போலீஸ் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் சிவானந்தம் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து மனோகர், கவிதா ஆகிய 2 பேரை கைது செய்தனர்.
Related Tags :
Next Story