வலங்கைமானில் பரபரப்பு: செல்போன் கோபுரத்தில் ஏறி தற்கொலை மிரட்டல் விடுத்த தொழிலாளி தீயணைப்பு வீரர்கள் பத்திரமாக மீட்டனர்
வலங்கைமானில், செல்போன் கோபுரத்தில் ஏறி தொழிலாளி தற்கொலை மிரட்டல் விடுத்தார். அவரை தீயணைப்பு வீரர்கள் பத்திரமாக மீட்டனர். இந்த சம்பவத்தால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
வலங்கைமான்,
திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் கீழத்தெருவை சேர்ந்தவர் சண்முகசுந்தரம்(வயது 37). கூலி தொழிலாளி. இவருடைய மனைவி விஜயலெட்சுமி. மாற்றுத்திறனாளி. இவர்களுக்கு திருமணமாகி 6 ஆண்டுகள் ஆகிறது. இவர்களுக்கு 1 குழந்தை உள்ளது. இந்த நிலையில் சண்முகசுந்தரம் வேலை எதுவும் செய்யாமல் இருந்து வருவதுடன் மாற்றுத்திறனாளிக்கு உதவியாக அரசு வழங்கும் இவருடைய மனைவியின் உதவித்தொகையான ரூ.1,500-ஐ வாங்கி அவரிடம் கொடுக்காமல் அந்த பணத்தில் மது குடித்து வந்துள்ளார். இதனால் குடும்ப தேவைக்கு மகளிர் குழுவில் விஜயலெட்சுமி கடன் வாங்கி இருந்தார். அந்த கடன் தொகையை மாதா மாதம் திருப்பி செலுத்துவதற்கும் சண்முகசுந்தரம் சம்பாதித்து தருவதில்லை என தெரிகிறது. இதனால் கணவன்-மனைவிக்கு இடையே பிரச்சினை ஏற்பட்டுள்ளது.
இந்த நிலையில் நேற்று சண்முகசுந்தரம் வலங்கைமான் கடைத்தெருவை அடுத்த அய்யனார் கோவில் தெருவில் உள்ள தனியார் செல்போன் கோபுரத்தில் ஏறி தற்கொலை செய்து கொள்ளப்போவதாக மிரட்டல் விடுத்தார். இதுகுறித்த தகவல் அறிந்ததும் தீயணைப்பு நிலைய அலுவலர் மூர்த்தி தலைமையில் தீயணைப்பு வீரர்கள் அங்கு சென்று கோபுரத்தில் இருந்து சண்முகசுந்தரத்தை பத்திரமாக மீட்டு அவரை பாதுகாப்பாக கீழே இறக்கி கொண்டு வந்தனர்.
இதுகுறித்து வலங்கைமான் போலீசார் சண்முகசுந்தரத்திடம் விசாரணை செய்தனர். மேலும் அவருக்கு அறிவுரை கூறியதுடன் இனிமேல் இதுபோன்ற சம்பவங்களில் ஈடுபடக்கூடாது என்று எச்சரிக்கையும் செய்து அனுப்பி வைத்தனர்.
இந்த தனியார் செல்போன் கோபுரத்தின் சுற்றுச்சுவர் எளிதில் ஏறிச்செல்லும் வகையிலும், காவலாளி யாரும் இல்லாத நிலையிலும் உள்ளதால் ஏற்கனவே இரண்டு முறை இதுபோன்ற சம்பவம் நடந்துள்ளது. நேற்று நடந்த சம்பவம் மூன்றாவது முறையாகும். இதனால் அங்கு அரை மணி நேரம் பதற்றமும், பரபரப்பும் ஏற்பட்டது.
எனவே அந்த செல்போன் கோபுரத்திற்கு யாரும் எளிதில் செல்லாத வகையில் சுற்றுச்சுவரின் உயரத்தை அதிகப்படுத்த வேண்டும். அல்லது அங்கு காவலாளியை பணியமர்த்த வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Related Tags :
Next Story