கூத்தாநல்லூர் அருகே இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் சாலை மறியல் வெண்ணாற்றில் பாலம் கட்ட கோரிக்கை


கூத்தாநல்லூர் அருகே இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் சாலை மறியல் வெண்ணாற்றில் பாலம் கட்ட கோரிக்கை
x
தினத்தந்தி 8 March 2019 10:45 PM GMT (Updated: 8 March 2019 5:16 PM GMT)

கூத்தாநல்லூர் அருகே வெண்ணாற்றில் பாலம் கட்டக்கோரி இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கூத்தாநல்லூர், 

திருவாரூர் மாவட்டம் கூத்தாநல்லூர் அருகே உள்ள நல்லவளம்பேத்தி கிராமத்தில் இருந்து அத்திக்கடை கிராமத்துக்கு செல்வதற்காக வெண்ணாற்றின் குறுக்கே மூங்கில் பாலம் உள்ளது. இந்த பாலத்தை கிராம மக்கள் போக்குவரத்துக்கு பயன்படுத்தி வந்தனர். இந்த மூங்கில் பாலம் தற்போது பழுதடைந்து விட்டது.

இதனால் நல்லவளம்பேத்தி, அத்திக்கடை, மேலவாழச்சேரி, வாழச்சேரி, முள்ளிப்பள்ளம், தெற்குசேத்தி, மணல்கொண்டான், லிங்கத்தடி உள்ளிட்ட கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் சிரமப்பட்டு வருகிறார்கள். இந்த நிலையில் வெண்ணாற்றில் மூங்கில் பாலத்துக்கு பதிலாக சிமெண்டு பாலம் கட்ட வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் நேற்று கூத்தாநல்லூர் அருகே வாழச்சேரியில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

போராட்டத்தில் பட்டா இல்லாத ஏழை, எளிய மக்களுக்கு நிலம் வழங்க வேண்டும். ரெகுநாதகாவிரியை தூர்வார வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளும் வலியுறுத்தப்பட்டன. இதுகுறித்து தகவல் அறிந்த கூத்தாநல்லூர் தாசில்தார் (பொறுப்பு) அன்பழகன் மற்றும் அதிகாரிகள் அங்கு சென்று சாலை மறியலில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர்.

இதில் கோரிக்கைகளை நிறைவேற்ற நடவடிக்கை எடுப்பதாக அதிகாரிகள் உறுதி அளித்தனர். அதன்பேரில் மறியல் கைவிடப்பட்டது. போராட்டம் காரணமாக கூத்தாநல்லூர்-கொரடாச்சேரி சாலையில் 20 நிமிடம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Next Story