கூடலூர் அருகே, காட்டுயானை தாக்கி விவசாயி பலி - உடலை எடுக்க விடாமல் போலீசாருடன் பொதுமக்கள் வாக்குவாதம்
கூடலூர் அருகே காட்டுயானை தாக்கி விவசாயி பலியானார். உடலை எடுக்க விடாமல் போலீசாருடன் பொதுமக்கள் வாக்குவாதம் செய்தனர்.
கூடலூர்,
கூடலூர் பகுதியில் காட்டுயானைகள் நடமாட்டம் அதிகரித்து உள்ளது. அவை குடியிருப்பு பகுதி மற்றும் விவசாய நிலங்களுக்குள் புகுந்து அட்டகாசம் செய்து வருகின்றன. இந்த நிலையில் கூடலூர் அருகே ஓவேலி பேரூராட்சிக்கு உட்பட்ட எல்லமலை பகுதியில் நேற்று காலை 10 மணியளவில் 2 காட்டுயானைகள் புகுந்தன. உடனே இதுகுறித்து வனத்துறைக்கு தகவல் கொடுக்கப்பட்டது. ஆனால் அவைகளை வனப்பகுதிக்குள் விரட்ட வனத்துறையினர் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது.
இதற்கிடையில் காட்டுயானைகள் அங்குள்ள தேயிலை தோட்டங்களில் உலா வந்தன. இதை அறியாத அதே பகுதியை சேர்ந்த விவசாயி பிரேம்குமார்(வயது 32) தனது தேயிலை தோட்டத்தில் வேலை பார்த்து கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த ஒரு காட்டுயானை பிரேம்குமாரை துரத்தியது. இதை சற்றும் எதிர்பாராத அவர் தப்பி ஓட முயன்றார்.
ஆனாலும் துரத்தி சென்ற காட்டுயானை அவரை தாக்கியது. இதில் சம்பவ இடத்திலேயே பிரேம்குமார் பலியானார். இருப்பினும் ஆத்திரம் அடங்காத காட்டுயானை பிரேம்குமாரின் உடலை காலால் மிதித்து சிதைத்தது. இதற்கிடையில் சத்தம் கேட்டு பொதுமக்கள் அங்கு திரண்டு வந்தனர். அப்போது பிரேம்குமாரின் உடல் அருகே காட்டுயானை நின்றிருந்தது. மேலும் பொதுமக்கள் கூட்டத்தை பார்த்ததும் காட்டுயானை அவர்களை துரத்தியது. இதற்கிடையே அந்த இடத்துக்கு மற்றொரு காட்டுயானையும் வந்தது. இதனால் பிரேம்குமாரின் உடலை பொதுமக்களால் மீட்க முடியவில்லை. இதுகுறித்து போலீசார் மற்றும் வனத்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் நியூகோப் போலீசார் மற்றும் வனத்துறையினர் சம்பவ இடத்துக்கு வந்தனர். தொடர்ந்து பட்டாசு வெடித்து காட்டுயானைகளை அங்கிருந்து வனப்பகுதிக்குள் விரட்டியடித்தனர்.
பின்னர் பிரேம்குமாரின் உடலை மீட்க போலீசார் முயன்றனர். ஆனால் உடலை எடுக்க விடாமல் பொதுமக்கள் வாக்குவாதம் செய்தனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
பின்னர் பொதுமக்களிடம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர். பேச்சுவார்த்தை நடந்து கொண்டிருக்கும்போது, சில போலீசார் பிரேம்குமாரின் உடலை வனத்துறை வாகனத்தில் ஏற்றி பிரேத பரிசோதனைக்காக கூடலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதை கண்டித்து வனத்துறை மற்றும் போலீசாரின் மற்ற வாகனங்களை பொதுமக்கள் சிறைபிடித்தனர். போலீசாரின் நீண்ட நேர பேச்சுவார்த்தைக்கு பிறகு வாகனங்களை பொதுமக்கள் விடுவித்துவிட்டு கலைந்து சென்றனர். அதன்பிறகு பொதுமக்கள் கூறியதாவது:-
கூடலூர் பகுதியில் காட்டுயானைகளால் பலரும் உயிரிழந்து வருகின்றனர்.
இதை தடுக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பது இல்லை. தற்போது உயிரிழந்த பிரேம்குமாருக்கு கடந்த 7 மாதங்களுக்கு முன்பு தான் திருமணம் நடந்தது. அவரது மனைவி கர்ப்பிணியாக உள்ளார். பிரேம்குமாரின் குடும்பத்தினருக்கு அரசு ரூ.10 லட்சம் நிவாரண தொகை வழங்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.
Related Tags :
Next Story