வெயிலின் தாக்கம் அதிகமுள்ள நேரத்தில் பொதுமக்கள் வெளியே செல்வதை தவிர்க்க வேண்டும் கலெக்டர் மலர்விழி அறிவுறுத்தல்


வெயிலின் தாக்கம் அதிகமுள்ள நேரத்தில் பொதுமக்கள் வெளியே செல்வதை தவிர்க்க வேண்டும் கலெக்டர் மலர்விழி அறிவுறுத்தல்
x
தினத்தந்தி 9 March 2019 4:15 AM IST (Updated: 8 March 2019 11:39 PM IST)
t-max-icont-min-icon

தர்மபுரி மாவட்டத்தில் வெயிலின் தாக்கம் அதிகமுள்ள நேரத்தில் பொதுமக்கள் வெளியே செல்வதை தவிர்க்க வேண்டும் என்று கலெக்டர் மலர்விழி அறிவுறுத்தி உள்ளார்.

தர்மபுரி,

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:-

கோடை காலம் தொடங்குவதால் வெயிலின் தாக்கம் அதிகரித்து வருகிறது. எனவே தர்மபுரி மாவட்ட பொதுமக்கள் வெப்பநிலை குறித்த விவரங்களை நாளிதழ்கள், ரேடியோ, தொலைக்காட்சி மற்றும் உள்ளூர் வானிலை ஆய்வு மைய அறிவிப்பின் மூலம் தினமும் தெரிந்து கொள்ளவேண்டும். தண்ணீர் தாகம் எடுக்காவிட்டாலும் அவ்வப்போது தண்ணீர் அருந்த வேண்டும். தினமும் குளிர்ந்த நீரில் குளித்து தளர்வான வெளிர்நிற பருத்தி ஆடைகளை அணிந்து கொள்ள வேண்டும்.

வீட்டை விட்டு வெளியே செல்லும்போது குடை, தொப்பி, காலணிகளை அணிந்து செல்ல வேண்டும். பயணம் மேற்கொள்ளும்போது குடிநீரை உடன் எடுத்து செல்ல வேண்டும். வெயில் அதிகமாக இருக்கும் நேரங்களில் கடுமையான உடல் உழைப்பினை தவிர்க்க வேண்டும். வீட்டு தயாரிப்புகளான அரிசி கஞ்சி, எலுமிச்சை சாறு, மோர், போன்றவற்றை அருந்த வேண்டும். வீடுகளில் வளர்க்கப்படும் ஆடு, மாடு உள்ளிட்ட கால்நடைகளை நிழலில் தங்க வைத்து நிறைய தண்ணீர் குடிக்க செய்ய வேண்டும்.

கடும் வெயில் காரணமாக உடல் சோர்வு, தலைசுற்றல், தலைவலி, குமட்டல், வலிப்பு போன்ற அறிகுறிகளோ, உடல்நலக்குறைவோ ஏற்பட்டால் உடனடியாக டாக்டரை அணுகி உரிய சிகிச்சை பெற வேண்டும். திறந்த வெளியில் வேலைகள் செய்யும்போது அவ்வப்போது போதுமான அளவு கால இடைவெளியில் ஓய்வு எடுத்துக்கொண்டு பின்னர் வேலையை தொடர வேண்டும். கர்ப்பிணிகள், மருத்துவ சிகிச்சை மேற்கொள்பவர்கள் கூடுமானவரை வெயிலில் செல்வதை தவிர்க்க வேண்டும்.

வாகனங்களை நிறுத்தம் செய்யும் போது தங்கள் குழந்தைகள் மற்றும் செல்லப்பிராணிகளை வாகனங்களிலேயே விட்டுவிட்டு செல்லக்கூடாது. வெயிலின் தாக்கம் பகல் 12 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை அதிகமாக இருக்கும் அந்த நேரத்தில் வெளியே செல்வதை பொதுமக்கள் தவிர்க்க வேண்டும். மது, டீ, காபி, செயற்கை குளிர்பானங்கள் உடலில் நீர் இழப்பை அதிகரிக்கும். இதனால் இவற்றை தவிர்ப்பது நல்லது. இறுக்கமான மற்றும் அடர் நிற ஆடைகளை அணியக் கூடாது.

இவ்வாறு அந்த செய்திக் குறிப்பில் கலெக்டர் மலர்விழி தெரிவித்து உள்ளார்.

Next Story