ரூ.50 லட்சத்தில் அருங்காட்சியகத்தை மேம்படுத்தும் பணி மும்முரம்


ரூ.50 லட்சத்தில் அருங்காட்சியகத்தை மேம்படுத்தும் பணி மும்முரம்
x
தினத்தந்தி 9 March 2019 4:30 AM IST (Updated: 9 March 2019 12:53 AM IST)
t-max-icont-min-icon

ஊட்டி அரசு அருங்காட்சியகத்தை ரூ.50 லட்சத்தில் மேம்படுத்தும் பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது.

ஊட்டி,

நீலகிரி மாவட்டம் ஊட்டியில் அரசு அருங்காட்சியகம் செயல்பட்டு வருகிறது. சிறியவருக்கு ரூ.3, பெரியவருக்கு ரூ.5, வெளிநாட்டினருக்கு ரூ.100 நுழைவுக்கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. பள்ளி மாணவ-மாணவிகளுக்கு கட்டணம் இல்லை. அருங்காட்சியக கட்டிடம் ஆங்கிலேயர் காலத்தில் முழுவதும் கற்களால் வடிவமைக்கப்பட்டு உள்ளதால், பாரம்பரியம் வாய்ந்த கட்டிடமாக கருதப்படுகிறது. இங்கு பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகள் மற்றும் சுற்றுலா பயணிகளுக்காக திட்ட பணிகள் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

அருங்காட்சியகத்தில் நீலகிரி வாழ் பறவைகளான வெல்வெட் நெற்றி பசையெடுப்பான், நீலகிரி காட்டுப்புறா, மலைச் சிட்டான், சோலைக்குயில், நீலகிரி சிரிப்பான் உள்ளிட்டவைகளின் புகைப்படங்கள் எலெக்ட்ரானிக் பலகையில் காட்சிப்படுத்தப்பட்டு உள்ளது. பழங்கால நாணயங்கள், ஓலைச்சுவடிகள், மரச்சிற்பங்கள், கற்சிற்பங்கள் மற்றும் பாறைகள், கனிமங்கள், அஞ்சல் தலைகள் காட்சிக்கு வைக்கப்பட்டு இருக்கிறது.

கோழி, சேவல், ஈக்கள், தேனீக்கள், பட்டாம்பூச்சிகள், செம்பருந்து, எறும்புத்தின்னி, உடும்பு, பூனை, சிறுத்தைப்புலி, நாகப்பாம்பு உள்ளிட்டவற்றின் உடல்கள் பதப்படுத்தி காட்சிக்கு வைக்கப்பட்டு உள்ளன. மேலும் மனிதனின் மண்டை ஓடு, குதிரையின் எலும்புக்கூடு இடம்பெற்று உள்ளது. ஊட்டி நகரின் பழமையான புகைப்படங்கள் காட்சிப்படுத்தப்பட்டு இருக்கிறது. நீலகிரியில் வனப்பகுதிகளையொட்டி வாழும் தோடர், கோத்தர், பனியர், இருளர், காட்டுநாயக்கர் ஆகிய ஆதிவாசிகளின் வாழ்க்கை முறைகள் குறித்த தகவல் பலகைகள் புகைப்படங்களுடன் இடம்பெற்று உள்ளது.

கோடை சீசன் மற்றும் 2-வது சீசனில் ஊட்டி அரசு அருங்காட்சியகத்துக்கு சுற்றுலா பயணிகள் வருகை தருகின்றனர். அவர்கள் காட்சிப்படுத்தப்பட்டவைகளை கண்டு ரசித்து செல்வதோடு, புகைப்படமும் எடுத்து கொள்கின்றனர். இதற்கிடையே மற்ற நேரங்களில் சுற்றுலா பயணிகள் எண்ணிக்கை மிகவும் குறைந்து காணப்படுகிறது. இதனால் சுற்றுலா பயணிகள் வருகையை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. அதன்படி அரசு அருங்காட்சியகத்தை மேம்படுத்தும் பணி தொடங்கி மும்முரமாக நடைபெற்று வருகிறது.

இதுகுறித்து அருங்காட்சியக காப்பாட்சியர் முருகவேல் கூறியதாவது:-

ஊட்டி அரசு அருங்காட்சியகத்தை மேம்படுத்த அரசு ரூ.50 லட்சம் நிதி ஒதுக்கி உள்ளது. கீழ்தளம் மற்றும் மேல்தளத்தில் காட்சி பொருட்கள் வைக்கும் இடம் நவீனப்படுத்தப்படுகிறது. சுவர் மற்றும் தளத்தில் மரத்தினால் ஆன பெட்டிகள், பிளைவுட்டுகள் அமைக்கும் பணி நடந்து வருகின்றது. முன்னதாக பழங்காலத்தில் விவசாயத்துக்கு பயன்படுத்தப்பட்ட பொருட்கள் மேஜை மீது வைக்கப்பட்டு இருந்தன. அவை பாதுகாக்கப்பட்ட மரம் மற்றும் கண்ணாடியால் ஆன பெட்டிகள், பிளைவுட் மீது காட்சிப்படுத்தப்பட உள்ளது. அருங்காட்சியகத்தை மேம்படுத்தும் பணி வருகிற 31-ந் தேதிக்குள் முடிக்க திட்டமிடப்பட்டு இருக்கிறது. ஏப்ரல் 1-ந் தேதியில் இருந்து சுற்றுலா பயணிகள் அருங்காட்சியகத்தை முழுமையாக பார்வையிடலாம். எதிர்காலத்தில் நுழைவுவாயில் பகுதியில் மெட்டல் டிடெக்டர் கருவி பொருத்தப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

Next Story