தர்மபுரி-மொரப்பூர் ரெயில்பாதை இணைப்பு திட்ட பணிகள் தொடக்கம்


தர்மபுரி-மொரப்பூர் ரெயில்பாதை இணைப்பு திட்ட பணிகள் தொடக்கம்
x
தினத்தந்தி 9 March 2019 3:45 AM IST (Updated: 9 March 2019 12:58 AM IST)
t-max-icont-min-icon

தர்மபுரி-மொரப்பூர் இடையே ரெயில்பாதை இணைப்பு திட்ட பணிகள் நேற்று தொடங்கியது.

மொரப்பூர்,

தர்மபுரி மாவட்டத்தில் உள்ள மிக முக்கியமான ரெயில் நிலையம் மொரப்பூர் ரெயில் நிலையம் ஆகும். இந்த ரெயில் நிலையம் 1.6.1861-ம் ஆண்டு செயல்பட தொடங்கியது. மொரப்பூர் ரெயில் நிலையத்துடன் தர்மபுரி மாவட்ட தலைநகரான தர்மபுரி நகரை இணைக்கும் வகையில் தர்மபுரி-மொரப்பூர் ரெயில்பாதை இணைப்பு திட்டம் ஆங்கிலேயர்களின் ஆட்சி காலத்தில் நிறைவேற்றப்பட்டு 1906-ம் ஆண்டு முதல் செயல்பாட்டிற்கு வந்தது. தர்மபுரி-மொரப்பூர் இடையே ஓடிய ரெயில்களால் விவசாயிகள், வணிகர்கள் உள்பட அனைத்து தரப்பு மக்களும் பயன்பெற்றனர்.

இந்த நிலையில் 1941-ம் ஆண்டு நிர்வாக காரணங்களுக்காக தர்மபுரி-மொரப்பூர் இடையே ரெயில் சேவை நிறுத்தப்பட்டது. அதன்பின் தர்மபுரி-மொரப்பூர் ரெயில்பாதை இணைப்பு திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என்று அன்புமணி ராமதாஸ் எம்.பி. உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சியினர் கோரிக்கை விடுத்து விடுத்தனர். தர்மபுரி-மொரப்பூர் ரெயில்பாதை இணைப்பு திட்டத்தை செயல்படுத்த மத்திய ரெயில்வே துறை ரூ.358.95 கோடி நிதி ஒதுக்கீடு செய்தது. அதற்கான அடிக்கல் நாட்டு விழா கடந்த 4-ந்தேதி தர்மபுரியில் நடைபெற்றது.

இந்த நிலையில் 36 கி.மீ. நீளம் கொண்ட தர்மபுரி-மொரப்பூர் ரெயில்பாதை இணைப்பு திட்ட பணிகளுக்கான பூமிபூஜை மொரப்பூரில் தர்மபுரி ரெயில்பாதை பிரிவு அருகே நேற்று நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் ரெயில்வே கட்டுமான பிரிவு முதுநிலை பொறியாளர் ராமலிங்கம், மொரப்பூர் ரெயில்நிலைய அலுவலர் உலகநாதன் மற்றும் ரெயில்வே பணியாளர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர். பூமிபூஜை முடிந்தபின் பொக்லைன் எந்திரம் மூலம் தர்மபுரி-மொரப்பூர் ரெயில்பாதை இணைப்பு திட்ட பணிகள் தொடங்கின.

Next Story