திருவலம் அருகே தனியார் நிலத்தில் பதுக்கிய 1½ டன் செம்மரக்கட்டைகள் பறிமுதல் சித்த மருத்துவருக்கு தொடர்பா? வனத்துறையினர் விசாரணை
திருவலம் அருகே தனியார் நிலத்தில் பதுக்கிய சுமார் 1½ டன் செம்மரக்கட்டைகள் பறிமுதல் செய்யப்பட்டது. இந்த சம்பவத்தில் சித்த மருத்துவருக்கு தொடர்பு உள்ளதா? என வனத்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சிப்காட் (ராணிப்பேட்டை),
இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:-
காட்பாடியை அடுத்த திருவலம் அருகே சேவூரில் பாலாஜி என்பவரின் விவசாய நிலம் உள்ளது. இந்த நிலத்தில் நேற்று காலை சுமார் 1½ டன் அளவுள்ள 9 செம்மரக்கட்டைகள் பதுக்கி வைக்கப்பட்டிருந்தன. இது குறித்து சேவூர் கிராம நிர்வாக அலுவலர் அருண்குமாருக்கு தெரிய வந்தது.
உடனடியாக அவர் கிராம உதவியாளர் அருள் என்பவருடன் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று செம்மரக்கட்டைகளை கைப்பற்றினார். அந்த இடத்தில் கார் ஒன்று நின்று கொண்டிருந்தது.
அந்த கார் குறித்து விசாரிப்பதற்காக இருவரும் சென்றபோது காருக்குள் அமர்ந்திருந்த டிரைவர் திடீரென காரை ‘ஸ்டார்ட்’ செய்து இவர்கள் மீது மோதுவதுபோல் ஓட்டிச்சென்று தப்பிவிட்டார்.
இந்த சம்பவத்தில் உயிர்தப்பிய கிராம நிர்வாக அலுவலர் அருண்குமார் இது தொடர்பாக திருவலம் போலீசில் புகார் அளித்தார்.
கைப்பற்றப்பட்ட செம்மரக்கட்டைகள் வேலூர் வனத்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டது.
மேலும் செம்மரக்கட்டைகளை கடத்தி வந்து பதுக்கி வைத்தது யார், அருகில் நிறுத்தப்பட்டிருந்த காரில் கடத்தப்பட்டதா, கடத்தி வந்தவர்கள் அருகில் உள்ள குடியிருப்பில் உள்ளவர்களா? வெளியூர்க்காரர்களா? என்ற கோணத்தில் வனத்துறையினரும், போலீசாரும் விசாரித்து வருகின்றனர். அவர்களது விசாரணையில் காரில் தப்பிச்சென்றவர் வித்யாஸ் என்பது தெரியவந்தது.
இந்த செம்மரக்கட்டை கடத்தலில் அங்குள்ள சித்த மருத்துவர் ஒருவருக்கும் தொடர்பிருக்கலாம் என கூறப்படுகிறது. அது குறித்தும் விசாரணை நடைபெற்று வருவதாக வனத்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
Related Tags :
Next Story