இலங்கைக்கு கடத்த முயன்ற 1,050 கிலோ பீடி இலை பறிமுதல்
தூத்துக்குடியில் இருந்து இலங்கைக்கு கடத்த முயன்ற 1,050 கிலோ பீடி இலை பறிமுதல் செய்யப்பட்டது.
தூத்துக்குடி,
தூத்துக்குடி செயின்ட் மேரிஸ் காலனி கிழக்கு பகுதியில் நேற்று முன்தினம் இரவு ஒரு லோடு ஆட்டோ நிறுத்தப்பட்டு இருந்தது. வெகுநேரமாக அந்த ஆட்டோ அங்கேயே நின்றதால் அந்த பகுதி மக்கள் சந்தேகப்பட்டு தாளமுத்துநகர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
உடனே தாளமுத்துநகர் போலீஸ் இன்ஸ்பெக்டர் சார்லஸ் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். அவர்கள் அந்த லோடு ஆட்டோவில் சோதனை செய்தபோது, கருப்பு பாலித்தீன் கவர் சுற்றப்பட்ட 35 பண்டல்கள் இருந்தன. அந்த பண்டல்களை பிரித்து பார்த்தபோது அதில் பீடி இலைகள் இருந்தது தெரியவந்தது.
அந்த பீடி இலை பண்டல்களை கடல் வழியாக இலங்கைக்கு கடத்துவதற்காக லோடு ஆட்டோவில் கொண்டு வரப்பட்டதும் தெரியவந்தது. இதையடுத்து போலீசார் பீடி இலை பண்டல்களுடன் அந்த லோடு ஆட்டோவை பறிமுதல் செய்து, தாளமுத்துநகர் போலீஸ் நிலையத்துக்கு கொண்டு வந்தனர். 35 பண்டல்களிலும் 1,050 கிலோ பீடி இலைகள் இருந்தன. அவற்றின் மொத்த மதிப்பு சுமார் ரூ.3 லட்சத்து 20 ஆயிரம் இருக்கலாம் என்று போலீசார் தெரிவித்தனர்.
இதுகுறித்து தாளமுத்துநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து, பீடி இலைகளை இலங்கைக்கு கடத்த முயன்ற நபர் யார்? என்பது குறித்தும், ஆட்டோவின் பதிவு எண்ணை கொண்டு அதன் உரிமையாளர் யார்? அவருக்கும் இந்த வழக்கில் தொடர்பு இருக்கிறதா? என்பது குறித்தும் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story