பா.ஜனதா-அ.தி.மு.க. கூட்டணி சமூக நீதிக்கு எதிரானது கே.எஸ்.அழகிரி பேட்டி
பா.ஜனதா-அ.தி.மு.க. கூட்டணி சமூக நீதிக்கு எதிரானது என்று தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி கூறினார்.
நெல்லை,
தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி நேற்று நாகர்கோவிலில் இருந்து சென்னை செல்லும் வழியில் நெல்லைக்கு வந்தார். அவருக்கு காங்கிரஸ் கட்சியினர் வரவேற்பு கொடுத்தனர். பின்னர் அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.
அப்போது அவர் கூறியதாவது:-
தமிழகத்தில் பா.ஜனதா, அ.தி.மு.க.வுடன் கூட்டணி வைத்து உள்ளது. அ.தி.மு.க.வை மிரட்டி கூட்டணியில் பா.ஜனதா சேர்த்து உள்ளது. இதனால் அந்த கட்சியினர் இடையே ஒரு பிடிப்பு இல்லை. இந்த கூட்டணி சமூக நீதிக்கு எதிரானது. இந்த கூட்டணியால் தமிழக மக்களுக்கு எந்த பயனும் கிடைக்காது. பாரதீய ஜனதா கட்சி நாட்டில் மதத்தையும், இனத்தையும் வைத்து அரசியல் நடத்துகிறது. இது ஆபத்தானது. மதத்தை வைத்து மக்களை பிரித்து வெற்றி பெற்றுவிடலாம் என்று நினைக்கிறார்கள். இதை நாட்டு மக்கள் நன்கு புரிந்து கொண்டனர். இதனால் அவர்களுடைய முயற்சி வெற்றியடையாது.
பா.ஜனதா-அ.தி.மு.க. கூட்டணியை தமிழகத்தில் உள்ள இளைஞர்கள் விரும்பவில்லை. இதனால் தி.மு.க.-காங்கிரஸ் கூட்டணி 40 தொகுதிகளிலும் வெற்றி பெறும். அரசியல் கட்சியினர் கொள்கை ரீதியாக செயல்படவேண்டும். லாபத்தை கணக்கில் கொண்டு செயல்படக்கூடாது. தே.மு.தி.க. கொள்கை ரீதியாக செயல்படவில்லை.
இவ்வாறு அவர் கூறினார்.
பேட்டியின்போது அகில இந்திய காங்கிரஸ் செயலாளர் சஞ்சய்தத், மாவட்ட தலைவர்கள் எஸ்.கே.எம்.சிவகுமார், சங்கரபாண்டியன் ஆகியோர் உடனிருந்தனர்.
Related Tags :
Next Story