கைதி சாவு விவகாரம்: சப்–இன்ஸ்பெக்டர், சிறைத்துறை அதிகாரி மீது வழக்கு


கைதி சாவு விவகாரம்: சப்–இன்ஸ்பெக்டர், சிறைத்துறை அதிகாரி மீது வழக்கு
x
தினத்தந்தி 9 March 2019 4:00 AM IST (Updated: 9 March 2019 3:22 AM IST)
t-max-icont-min-icon

சிறை கைதி மரணம் தொடர்பாக போலீஸ் சப்–இன்ஸ்பெக்டர், சிறைத்துறை அதிகாரி மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

புதுச்சேரி,

புதுவையை அடுத்த தமிழக பகுதியான ரெட்டிச்சாவடி கரிக்கன் நகரை சேர்ந்தவர் ஜெயமூர்த்தி (வயது 23). இவர் திருட்டு வழக்கு தொடர்பாக கைது செய்யப்பட்டு பாகூர் போலீசார் விசாரணை நடத்தினார்கள். அப்போது அவரை தாக்கியதாக கூறப்படுகிறது. அதன்பின் சிறையில் அடைக்கப்பட்ட ஜெயமூர்த்தி உடல்நலம் பாதிக்கப்பட்டு புதுவை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பலனின்றி கடந்த ஆண்டு நவம்பர் 27–ந்தேதி உயிரிழந்தார்.

போலீசாரின் தாக்குதலால்தான் ஜெயமூர்த்தி இறந்ததாகவும், போலீசார் மீது நடவடிக்கை எடுக்கக்கோரியும் அவரது உறவினர்கள் போராட்டம் நடத்தினார்கள். இதைத்தொடர்ந்து பாகூர் போலீஸ் சப்–இன்ஸ்பெக்டர் ஜெயகுருநாதன் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.

ஜெயமூர்த்தியின் பிரேத பரிசோதனை ஜிப்மர் ஆஸ்பத்திரியில் நடந்தது. சந்தேக மரணம் என்ற பிரிவில் பதிவு செய்யப்பட்ட இந்த வழக்கு விசாரணை சி.பி.சி.ஐ.டி. போலீசுக்கும் மாற்றப்பட்டது. ஜெயமூர்த்தியின் மரணம் தொடர்பாக நீதிபதி சரண்யா விசாரணை நடத்தி, அறிக்கையை சமர்ப்பித்தார்.

அந்த அறிக்கையின் அடிப்படையில் ஜெயமூர்த்தி மரணம் தொடர்பாக பாகூர் போலீஸ் நிலைய சப்–இன்ஸ்பெக்டராக பணியாற்றிய சிவகுருநாதன், சிறைத்துறை சூப்பிரண்டு பாஸ்கரன், சிறைத்துறை டாக்டர் ஆகியோர் மீது 304–வது (கொலை இல்லாத மரணத்தை ஏற்படுத்துதல்) பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.


Next Story