கடலூர் அரசு கல்லூரியில் முப்பெரும் விழா, கற்ற கல்வியை சமுதாய முன்னேற்றத்துக்கு பெண்கள் பயன்படுத்த வேண்டும் - மாவட்ட முதன்மை நீதிபதி பேச்சு


கடலூர் அரசு கல்லூரியில் முப்பெரும் விழா, கற்ற கல்வியை சமுதாய முன்னேற்றத்துக்கு பெண்கள் பயன்படுத்த வேண்டும் - மாவட்ட முதன்மை நீதிபதி பேச்சு
x
தினத்தந்தி 8 March 2019 10:27 PM GMT (Updated: 8 March 2019 10:27 PM GMT)

கற்ற கல்வியையும், பெற்ற அறிவையும் சமுதாய முன்னேற்றத்துக்கு பெண்கள் பயன்படுத்த வேண்டும் என்று கடலூர் பெரியார் அரசு கல்லூரியில் நடந்த முப்பெரும் விழாவில் மாவட்ட முதன்மை நீதிபதி கோவிந்தராஜன் திலகவதி பேசினார்.

கடலூர்,

கடலூர் பெரியார் அரசு கல்லூரியில் ஆண்டு விழா, மகளிர் தின விழா, விளையாட்டு விழா ஆகிய முப்பெரும் விழா நடந்தது. விழாவுக்கு கல்லூரி முதல்வர் ராஜகுமார் தலைமை தாங்கி ஆண்டு அறிக்கை வாசித்தார். தமிழ்த்துறை தலைவர் குமரன் வரவேற்றார். உடற்கல்வி இயக்குனர் குமணன் விளையாட்டு அறிக்கையை வாசித்தார்.

கடலூர் அனைத்து குடியிருப்போர் நலச்சங்கங்களின் கூட்டமைப்பு பொதுச்செயலாளர் மருதவாணன் கலந்து கொண்டு பேசினார். விழாவில் சிறப்பு அழைப்பாளர்களாக மாவட்ட முதன்மை நீதிபதி கோவிந்தராஜன் திலகவதி, கல்லூரி கல்வி தஞ்சாவூர் மண்டல ஓய்வு பெற்ற இணை இயக்குனர் மனோகரன், மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு செயலாளர் நீதிபதி சுந்தரம், மாவட்ட விளையாட்டு அலுவலர் ராஜா, சர்வதேச கூடைப்பந்து வீரர் தங்கதுரை ஆகியோர் கலந்து கொண்டு பேசினர்.

விழாவில் மாவட்ட முதன்மை நீதிபதி கோவிந்தராஜன் திலகவதி பேசியதாவது:-

பெண்களின் உரிமை மற்றும் பாதுகாப்புக்குத்தான் மகளிர் தின விழா கொண்டாடப்படுகிறது. பெண்கள் தாங்கள் கற்ற கல்வி, பெற்ற அறிவை சமுதாய முன்னேற்றத்துக்கு பயன்படுத்த வேண்டும். ஒரு பெண் கல்வி கற்றால் வீடு, சமுதாயம், நாடு முன்னேற்ற பாதையில் செல்லும். இதற்கு பெண்கள் விழிப்போடு இருக்க வேண்டும். பெண்கள் சாதனை, வீரம், பக்தியுடன் செயல்பட்டு இருக்கிறார்கள். அதியமானிடம் நெல்லிக்கனி பெற்ற அவ்வையார் நட்புக்கு இலக்கணமாக இருந்தார். பக்திக்கு மீரா, சாதனைக்கு கல்பனா சாவ்லா, வீரத்துக்கு வேலுநாச்சியார் ஆகியோர் இருந்துள்ளனர். ஆணுக்கு பெண் சமம் என்று பேசினாலும், பெண்கள் கட்டுப்பாட்டுடன் இருக்க வேண்டும். அதுதான் பெண்மைக்கு பெருமை. பெண்களுக்கு பல்வேறு திட்டங்களை அரசு செயல்படுத்தி வருகிறது.

குறிப்பாக மகளிர் சக்திகேந்திரா திட்டம் உள்ளது. இது போன்ற பெண்களுக்கான திட்டங்களை அறிந்து கொள்ள வேண்டும். இது பற்றி பெண்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தி, கண்காணிக்க வேண்டும். பெண்கள் தங்களுக்கு எதிரான வன்கொடுமை பற்றி புகார்களை இணைய தளம் மூலம் தெரிவிக்கலாம். இதற்கான வசதி சமூக நலத்துறை மூலம் ஏற்படுத்தப்பட்டுள்ளது. பெண்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும்.

இவ்வாறு மாவட்ட முதன்மை நீதிபதி கோவிந்தராஜன் திலகவதி கூறினார்.

முன்னதாக ஒவ்வொரு துறையிலும் அதிக மதிப்பெண்கள் பெற்ற மாணவ-மாணவிகள், பல்வேறு விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ-மாணவிகளுக்கு பரிசு மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டது.

விழாவை தமிழ்த்துறை உதவி பேராசிரியர் கீதா தொகுத்து வழங்கினார். விழாவில் கல்லூரி மாணவ-மாணவிகளுக்கு தங்களது சான்றிதழ்களை பாதுகாப்பாக வைக்க கோப்புகள் (பைல்) வழங்கப்பட்டது. விழாவில் அனைத்து துறை தலைவர்கள், பேராசிரியர்கள், பணியாளர்கள், மாணவ-மாணவிகள் கலந்து கொண்டனர். முடிவில் பொருளியல் துறை தலைவர் ராமகிருஷ்ணன் சாந்தி நன்றி கூறினார்.

Next Story