தேர்தலில் சாதி, பணம் முக்கிய பங்காற்றுகிறது ‘வாக்காளர்களை ஊழல்வாதிகளாக மாற்றிவிட்டோம்’ சித்தராமையா வேதனை
தேர்தலில் சாதி, பணம் முக்கிய பங்காற்றுகிறது. வாக்காளர்களை ஊழல்வாதிகளாக மாற்றிவிட்டோம் என்று சித்தராமையா கூறினார்.
பெங்களூரு,
தேர்தலில் சாதி, பணம் முக்கிய பங்காற்றுகிறது. வாக்காளர்களை ஊழல்வாதிகளாக மாற்றிவிட்டோம் என்று சித்தராமையா கூறினார்.
ஊழல் செய்யவில்லை
சாந்தவீர கோபால்கவுடா வாழ்க்கை வரலாறு புத்தக வெளியீட்டு விழா பெங்களூருவில் நடைபெற்றது. இதில் முன்னாள் முதல்-மந்திரி சித்தராமையா கலந்து கொண்டு அந்த புத்தகத்தை வெளியிட்டு பேசியதாவது:-
சாந்தவீர கோபால்கவுடா காலத்தில் தேர்தலில் போட்டியிட்டவர்கள் மற்றும் வாக்காளர்கள் ஊழல் செய்யவில்லை. அரசியல்வாதிகளும் நேர்மையாக இருந்தனர். வாக்காளர்களும் நேர்மையாக வாக்களித்தனர்.
ஊழலற்ற அரசியலை...
ஆனால் தற்போது தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களும், வாக்காளர்களும் ஊழல்வாதிகளாக ஆகிவிட்டனர். வாக்காளர்கள், அவர்களாக ஊழல்வாதிகள் ஆகவில்லை. நம்மை போன்றவர்கள் தான் அவர்களை ஊழல்வாதிகளாக மாற்றிவிட்டோம். இன்றைய சூழ்நிலையில் ஊழலற்ற அரசியலை நினைத்துகூட பார்க்க முடியாது.
நானும் இந்த அரசியல் சூழ்நிலையில் சிறிது சமரசம் செய்து கொண்டுள்ளேன். இதனால் நாங்கள் கெட்டுப்போய்விட்டோம். தேர்தல் நடைமுறையையும் கெடுத்துவிட்டோம். கோபால்கவுடாவும் ஒக்கலிகரே. அவர், எனது சாதியை பார்த்து எனக்கு ஓட்டுப்போட வேண்டாம் என்று பிரசாரம் செய்தவர்.
சாதி மற்றும் பணம்
ஆனால் இப்போது இருப்பவர்கள் அப்படி சொல்கிறார்களா?. நான் உங்கள் சாதியை சேர்ந்தவன், எனக்கு ஓட்டுப்போடுங்கள் என்று பிரசாரம் செய்கிறார்கள். சாதி மற்றும் பணம் இவை இரண்டும் இல்லாமல் இன்றைய அரசியல் இல்லை.
இந்த இரண்டும் இருந்தால் மட்டுமே பெரும்பாலானவர்கள் வெற்றி பெறுகிறார்கள். முன்பு சமூக போராட்டங்களில் இருந்தவர்கள் அரசியலுக்கு வந்தனர். இப்ேபாது ரியல் எஸ்டேட் தொழில் செய்பவர்கள், கல்வித்துறையில் இருப்பவர்கள் அரசியலுக்கு வருகிறார்கள்.
தேர்தலில் நேர்மையாளர்கள் எளிதாக வெற்றி பெற முடியாது. வெற்றி பெறுபவர்களை சட்டசபையில் கட்டாயப்படுத்தி உட்கார வைக்க வேண்டிய நிலை உள்ளது. இதையெல்லாம் பார்க்கும்போது, ஜனநாயகம் அபாயத்தில் உள்ளது என்று நினைக்க தோன்றுகிறது.
இவ்வாறு சித்தராமையா பேசினார்.
Related Tags :
Next Story