நெய்வேலியில், காதல் திருமணம் செய்த இளம்பெண், தூக்குப்போட்டு தற்கொலை - போலீசார் விசாரணை


நெய்வேலியில், காதல் திருமணம் செய்த இளம்பெண், தூக்குப்போட்டு தற்கொலை - போலீசார் விசாரணை
x
தினத்தந்தி 9 March 2019 4:30 AM IST (Updated: 9 March 2019 4:11 AM IST)
t-max-icont-min-icon

நெய்வேலியில் காதல் திருமணம் செய்த இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

நெய்வேலி,

நெய்வேலி 21-வது வட்டம் கலைஞர் தெருவை சேர்ந்தவர் கோபிநாத்(வயது 22). இவரும், அதே பகுதி வாசகர் சாலையை சேர்ந்த பாண்டுரங்கன் மகள் சினேகாவும்(19) உயிருக்கு உயிராக காதலித்தனர். இவர்களது காதலுக்கு இருவீட்டு பெற்றோரும் சம்மதம் தெரிவித்தனர். இதனை தொடர்ந்து கோபிநாத்துக்கும், சினேகாவுக்கும் கடந்த 17.7.2017 அன்று திருமணம் நடந்தது.

திருமணத்தின்போது கோபிநாத் வரதட்சணை ஏதும் கேட்கவில்லை. திருமணமான ஓராண்டு புதுமண தம்பதிகள் மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்தனர்.

இந்த நிலையில் கடந்த 6 மாதங்களாக அவர்களுக்குள் குடும்ப பிரச்சினை ஏற்பட்டது. இதனால் கணவன்-மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. சம்பவத்தன்று வீட்டை ஏன் சுத்தமாக வைக்கவில்லை என்று சினேகாவிடம் கோபிநாத் கேட்டார். இதனால் அவர்களுக்குள் வாய்த்தகராறு ஏற்பட்டது.

இதில் கோபித்துக்கொண்ட சினேகா, தனது பெற்றோர் வீட்டிற்கு சென்று விட்டார். அங்கு அவரது பெற்றோர் மற்றும் உறவினர்கள் சமாதானப்படுத்தி நேற்று முன்தினம் சினேகாவை கோபிநாத்தின் வீட்டிற்கு அனுப்பி வைத்தனர். இருப்பினும் கோபிநாத்துடன் வாழ பிடிக்காமல் சினேகா யாரிடமும் பேசாமல் இருந்ததாக கூறப்படுகிறது. இதனால் அன்று இரவே வீட்டின் உத்தரத்தில் துப்பட்டாவால் சினேகா தூக்குப்போட்டுக்கொண்டார்.

இது பற்றி தகவல் அறிந்ததும் சினேகாவின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் பதறியடித்துக்கொண்டு ஓடிவந்தனர். பின்னர் அவரை மீட்டு சிகிச்சைக்காக என்.எல்.சி. பொதுமருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள், ஏற்கனவே சினேகா இறந்து விட்டதாக கூறினர்.

இதனிடையே தகவல் அறிந்ததும் தெர்மல் போலீசார் அங்கு விரைந்து வந்தனர். சினேகாவின் உடலை கைப்பற்றிய போலீசார், பிரேத பரிசோதனைக்காக கடலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து பாண்டுரங்கன் கொடுத்த புகாரின் பேரில் தெர்மல் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் திருமணமான 1½ ஆண்டிலேயே சினேகா தற்கொலை செய்து கொண்டதால், கடலூர் சப்-கலெக்டர் சரயூ விசாரணைக்கு போலீசார் பரிந்துரை செய்துள்ளனர்.

Next Story