3 வயது சிறுமி கடத்தி கற்பழித்து கொலை வாலிபருக்கு தூக்கு தண்டனை தானே கோர்ட்டு பரபரப்பு தீர்ப்பு


3 வயது சிறுமி கடத்தி கற்பழித்து கொலை வாலிபருக்கு தூக்கு தண்டனை தானே கோர்ட்டு பரபரப்பு தீர்ப்பு
x
தினத்தந்தி 9 March 2019 4:15 AM IST (Updated: 9 March 2019 4:15 AM IST)
t-max-icont-min-icon

3 வயது சிறுமியை கடத்தி கற்பழித்து கொலை செய்த வாலிபருக்கு தூக்கு தண்டனை விதித்து தானே கோர்ட்டு பரபரப்பு தீர்ப்பு வழங்கியது.

தானே, 

3 வயது சிறுமியை கடத்தி கற்பழித்து கொலை செய்த வாலிபருக்கு தூக்கு தண்டனை விதித்து தானே கோர்ட்டு பரபரப்பு தீர்ப்பு வழங்கியது.

காணாமல் போன சிறுமி

தானே கோட்பந்தர் ரோடு பகுதியை சேர்ந்த 3 வயது சிறுமி, கடந்த 2013-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 30-ந்தேதி வீட்டின் அருகே விளையாடி கொண்டிருந்த போது திடீரென மாயமானாள். இது தொடர்பாக சிறுமியின் பெற்றோர் காசர்வடவலி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரின்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து சிறுமியை தேடிவந்தனர்.

இந்த சம்பவம் நடந்த 3 நாள் கழித்து வாக்பில் ஜூனாகோடா பகுதியில் சிறுமி ஒருவள் கொலை செய்யப்பட்ட நிலையில் பிணமாக கிடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

தகவலின்பேரில் போலீசார் அங்கு விரைந்து சென்று சிறுமியின் உடலை கைப்பற்றி விசாரணை நடத்தினர். இதில், அவள் காணாமல் போன 3 வயது சிறுமி என்பது தெரியவந்தது.

இதைத்தொடர்ந்து போலீசார் சிறுமியின் உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். பிரேத பரிசோதனை அறிக்கையில் சிறுமி கற்பழித்து கொலை செய்யப்பட்ட அதிர்ச்சி தகவல் தெரியவந்தது.

தூக்கு தண்டனை

இதுபற்றி போலீசார் நடத்திய தீவிர விசாரணையில், அதே பகுதியை சேர்ந்த ராம்கிர்மி கவுட்(வயது28) என்பவர் பிடிபட்டார். அவரிடம் நடத்திய கிடுக்கிப்பிடி விசாரணையில், குடிபோதையில் சிறுமியை கடத்தி கற்பழித்ததை ஒப்புக்கொண்டார்.

மேலும் இந்த சம்பவத்தை சிறுமி வீட்டில் சொல்லி விடுவாள் என்ற பயத்தில் அவளை கொலை செய்து வீசியதாக தெரிவித்தார்.

இதைத்தொடர்ந்து போலீசார் அவரை கைது செய்தனர். பின்னர் அவர் மீது தானே செசன்ஸ் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். நீதிபதி எஸ்.ஏ.சவுத்ரி வழக்கை விசாரித்து வந்தார்.

வழக்கு விசாரணையின் போது ராம்கிர்மி கவுட்டுக்கு எதிராக 18 பேர் சாட்சியம் அளித்தனர். விசாரணை முடிந்து நேற்று தீர்ப்பு வழங்கப்பட்டது.

அப்போது குற்றவாளி ராம்கிர்மி கவுட்டுக்கு தூக்கு தண்டனை விதித்து நீதிபதி பரபரப்பு தீர்ப்பு வழங்கி னார்.

Next Story