பெண்ணாடம் அருகே, மின்மாற்றி மீது பஸ் மோதல் - 40 பயணிகள் உயிர் தப்பினர்
பெண்ணாடம் அருகே மின்மாற்றி மீது பஸ் மோதியதில் 40 பயணிகள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.
பெண்ணாடம்,
திருச்சியில் இருந்து 40-க்கும் மேற்பட்ட பயணிகளை ஏற்றிக்கொண்டு அரசு பஸ் ஒன்று கடலூர் நோக்கி புறப்பட்டது. இந்த பஸ்சை ஆலந்தூர் நாட்டார்மங்கலத்தை சேர்ந்த ஜெயகண்ணன் (வயது 47) என்பவர் ஓட்டினார். பெரம்பலூர் தீரன் நகரை சேர்ந்த இளங்கோவன்(52) கண்டக்டராக இருந்தார். அந்த பஸ் நேற்று காலை 11 மணியளவில் கடலூர் மாவட்டம் பெண்ணாடம் கிழக்கு வால்பட்டறை பஸ்நிறுத்தம் அருகே வந்து கொண்டிருந்தது. அப்போது சவுந்திரசோழபுரத்தை சேர்ந்த பெருமாள்(65) என்பவர் சைக்கிளில் திடீரென சாலையை கடக்க முயன்றார். இதை எதிர்பாராத ஜெயகண்ணன், பெருமாள் மீது மோதாமல் இருப்பதற்காக பஸ்சை திருப்பினார்.
இதில் அவரது கட்டுப்பாட்டை இழந்த பஸ் சாலையோரம் இருந்த மின்மாற்றி மீது மோதி நின்றது. பஸ் மோதிய உடனே ஒயர்கள் அறுந்து விழுந்து மின்தடை ஏற்பட்டதால், பஸ்சில் இருந்த பயணிகள் அனைவரும் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். இந்த விபத்தில் பஸ்சின் முன்பக்க கண்ணாடி உடைந்தது.
இதற்கிடையே விபத்தை பார்த்தபடி சைக்கிளில் சென்ற பெருமாள், மின்கம்பத்தில் மோதி கீழே விழுந்தார். இதில் பலத்த காயமடைந்த அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக பெண்ணாடம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு டாக்டர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர்.
விபத்து பற்றி அறிந்த மின்வாரிய ஊழியர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து அறுந்து விழுந்த ஒயர்கள் மற்றும் மின்மாற்றியை சீரமைக்கும் பணியில் ஈடுபட்டனர்.
Related Tags :
Next Story