வளர்ச்சி பாதையில் சென்று கொண்டிருக்கிறது விதர்பா தனி மாநில கோரிக்கை நியாயமற்றது சிவசேனா சொல்கிறது


வளர்ச்சி பாதையில் சென்று கொண்டிருக்கிறது விதர்பா தனி மாநில கோரிக்கை நியாயமற்றது சிவசேனா சொல்கிறது
x
தினத்தந்தி 9 March 2019 4:45 AM IST (Updated: 9 March 2019 4:22 AM IST)
t-max-icont-min-icon

வளர்ச்சி பாதையில் செல்லும் விதர்பாவை தனி மாநிலமாக கோருவது முற்றிலும் நியாயமற்றது என சிவசேனா கூறியுள்ளது.

மும்பை, 

வளர்ச்சி பாதையில் செல்லும் விதர்பாவை தனி மாநிலமாக கோருவது முற்றிலும் நியாயமற்றது என சிவசேனா கூறியுள்ளது.

நிதின் கட்காரி கருத்து

மராட்டியத்தின் விதர்பா மண்டலம் வளர்ச்சியில் பின்தங்கிய நிலையிலேயே உள்ளது. எனவே விதர்பாவை தனி மாநிலமாக அறிவிக்கவேண்டும் என்ற கோரிக்கையை அந்த மண்டலத்தை சேர்ந்த பல்வேறு அமைப்புகளும், கட்சி தலைவர்களும் முன்வைத்து வருகின்றனர். குறிப்பாக பா.ஜனதா கூட கடந்த சட்டமன்ற தேர்தலின் போது தனிமாநில வாக்குறுதி அளித்தது.

இந்த நிலையில் சமீபத்தில் மத்திய மந்திரி நிதின் கட்காரி நாக்பூரில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசியபோது, வளர்ச்சிப் பாதையில் சென்றுகொண்டு இருக்கும் விதர்பாவை தனி மாநிலமாக கேட்பது ஒருபோதும் சரியாகாது என பேசினார். இதற்கு கூட்டத்தில் கலந்துகொண்ட சிலர் எதிர்ப்பு தெரிவித்து கோஷம் எழுப்பினர்.

இதுகுறித்து பா.ஜனதாவின் கூட்டணி கட்சியான சிவசேனாவின் அதிகாரப்பூர்வ பத்திரிகையான சாம்னாவில் வெளியான தலையங்கத்தில் கூறியிருப்பதாவது:-

வளர்ச்சி கண்டுள்ளது

விதர்பா கடந்த 40 முதல் 50 ஆண்டுகளில் இருந்ததை விட கடந்த 4 ஆண்டுகளில் பல்வேறு வளர்ச்சியை கண்டுள்ளது. நாக்பூர் எம்.எல்.ஏ.வும், முதல்-மந்திரியுமான தேவேந்திர பட்னாவிஸ் விதர்பா மண்டலத்தில் சாலைபணிகள், நிறுவனங்கள் மற்றும் கல்வி வளர்ச்சியில் சிறப்பு கவனம் செலுத்தி வருகிறார்.

மேலும் விதர்பா மண்டலத்தை வளர்ச்சி பாதையில் கொண்டு செல்ல பல்வேறு திட்டங்களும் அறிவிக்கப்பட்டு உள்ளன.

விதர்பா தனி மாநில கோரிக்கை எப்போதும் சில கட்சிகளால் அரசியல் கருவியாக பன்படுத்தப்பட்டு வருகிறது. ஆனால் அவர்களுக்கு மக்களின் ஆதரவு இல்லை.

வளர்ச்சி பாதையில் அடி எடுத்து வைக்கும் விதர்பாவை தனி மாநிலமாக கேட்க அவசியம் இல்லை. மாநில ஒற்றுமை குறித்து பொது தளத்தில் பேசிய மத்திய மந்திரி நிதின் கட்காரி பாராட்டுக்குரியவர்.

இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

விதர்பா தனி மாநில கோரிக்கைக்கு சிவசேனா ஏற்கனவே எதிர்ப்பு தெரிவித்து வருவது குறிப்பிடத்தக்கது.

Next Story