பா.ஜ.க. கூட்டணியை விரும்பவில்லை, விவசாயிகளுடன் இணைந்து செயல்பட விரும்பும் கட்சிகளுக்கு வாக்களிக்க வேண்டும் - பி.ஆர்.பாண்டியன் பேச்சு


பா.ஜ.க. கூட்டணியை விரும்பவில்லை, விவசாயிகளுடன் இணைந்து செயல்பட விரும்பும் கட்சிகளுக்கு வாக்களிக்க வேண்டும் - பி.ஆர்.பாண்டியன் பேச்சு
x
தினத்தந்தி 9 March 2019 4:52 AM IST (Updated: 9 March 2019 4:52 AM IST)
t-max-icont-min-icon

பா.ஜ.க. கூட்டணியை விரும்பவில்லை. விவசாயிகளுடன் இணைந்து செயல்பட விரும்பும் கட்சிகளுக்கு வாக்களிக்க வேண்டும் என பி.ஆர்.பாண்யடின் பேசினார்.

தஞ்சாவூர்,

நாடாளுமன்ற தேர்தலையொட்டி விவசாயிகளுக்கான முன்னோட்ட நிழல் தேர்தல் அறிக்கை குறித்து பிரசார பயணம் தமிழக அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்புக்குழு சார்பில் முல்லைபெரியாறு அணையில் உள்ள பென்னிகுயிக் மணி மண்டபத்தில் கடந்த 1-ந் தேதி தொடங்கியது.

தமிழகம் முழுவதும் 32 மாவட்டங்களிலும் நடந்த விவசாயிகள் சந்திப்பு பிரசார பயணம் தஞ்சையில் நேற்றுமாலை நிறைவடைந்தது. பின்னர் தஞ்சை ஆப்ரகாம்பண்டிதர் சாலையில் பொதுக்கூட்டம் நடந்தது. இதற்கு தமிழக அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்புக்குழு தலைவர் பி.ஆர்.பாண்டியன் தலைமை தாங்கி பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

பிரதமர் மோடி தலைமையிலான 5 ஆண்டு கால ஆட்சியில் கடன் தள்ளுபடி செய்வதையும், விலை நிர்ணயம் செய்வதையும் மறுத்து கொள்கை முடிவு எடுக்கப்பட்டது. ஹைட்ரோ கார்பன் உள்ளிட்ட இயற்கை வளங்களை எடுப்பதற்கு அனுமதி வழங்கி விளை நிலங்களை அபகரிக்க தீவிரம் காட்டியது, காவிரி, முல்லைப்பெரியாறு போன்ற நீர் ஆதார பிரச்சினைகளில் தமிழக நலனுக்கு எதிராக தீவிரம் காட்டுவது, கஜா புயலால் உயிரிழந்தவர்களுக்கு ஆறுதல் சொல்ல மறுத்தது, நிதி ஒதுக்கீடு செய்வதில் பாரபட்சம் காட்டி தமிழக வளர்ச்சிக்கே தடையாக இருந்தது போன்ற நிலைபாட்டினால் போராட்டமே வாழ்க்கையாகி தமிழக விவசாயிகள் நிம்மதியை இழந்துள்ளனர்.

இதற்கான போராட்டங் களில் அ.தி.மு.க. நாடாளுமன்றத்தையே முடக்கியது. சட்டமன்றத்திலும் வெளிப்படையாக விமர்சித்துவிட்டு தற்போது பா.ஜ.க.வுடன் கூட்டணி அமைத்துள்ளது சந்தர்ப்பவாதம் ஆகும். பா.ஜ.க. கூட்டணிக்கு வாக்களிக்க விவசாயிகள் விரும்பவில்லை.

விவசாயிகள் ஒன்றிணைந்து அரசியலுக்கு அப்பாற்பட்டு செயல்படுவதை சில அரசியல் கட்சிகள் ஏற்கவில்லை. நாடாளுமன்ற தேர்தலில் கூட ஒரு சில கட்சிகள் விவசாயிகளோடு இணைந்து தேர்தலை சந்திக்க விருப்பம் தெரிவித்துள்ளதை வரவேற்கிறோம். எனவே விவசாய அமைப்புகள் ஒன்றிணைய வேண்டும் என்ற விவசாயிகளின் மனநிலையை உணர்ந்து அதற்கு மதிப்பளித்து செயல்பட முன்வர வேண்டும்.

தற்போதைய நிலையில் தேர்தல் கூட்டணி என்பது சாத்தியமில்லை. எனவே விவசாயிகளோடு இணைந்து பணியாற்ற விரும்பும் கட்சிகளோடு எதிர்காலத்தில் விவசாயிகளுக்கான போராட்டத்தில் ஒன்றுபட்டு செயல்படுவதோடு, அடுத்து வரும் தமிழக சட்டசபை தேர்தலிலும் அதையே தொடர விரும்புகிறோம்.

விவசாயிகளுக்கான முன்னோட்ட நிழல் தேர்தல் அறிக்கையை கடந்த மாதம் 16-ந் தேதி வெளியிட்டு அனைத்து அரசியல் கட்சிகளுக்கும் அனுப்பி வைத்தோம். இந்த அறிக்கைக்கு அ.ம.மு.க., மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி, த.மா.கா. ஆகியவை மட்டுமே ஆதரவு தெரிவித்துள்ளனர். அறிக்கையை ஏற்று கொண்டும், வரும் காலத்தில் விவசாயிகள் அமைப்போடு இணைந்து செயல்பட விரும்பும் கட்சிகளின் வேட்பாளர்களை அடையாளம் கண்டு வாக்களிக்க வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

கூட்டத்தில் பொதுச்செயலாளர் வெங்கடேசன், கவுரவ தலைவர் பாலு, மாநில பொருளாளர் ஸ்ரீதர் மற்றும் நிர்வாகிகள் புண்ணியமூர்த்தி, சின்னசாமி, குமார், திருப்பதிவாசகன், திருப்பதி வாண்டையார், அண்ணாதுரை மற்றும் பலர் கலந்து கொண்டனர். தொடக்கத்தில் மாவட்ட செயலாளர் மணி வரவேற்றார். முடிவில் மாவட்ட செயலாளர் ரமேஷ்குமார் நன்றி கூறினார்.

Next Story