‘காபி’ குடும்பம்
வீட்டிலேயே காபி தோட்டத்தை உருவாக்கி, வளர்த்து அதில் இருந்து காபி கொட்டைகளை எடுத்து காபி தயாரித்து பருகுகிறார், அர்ஜூன் பெல்மார்.
இவருடைய குடும்பம் 30 ஆண்டுகளுக்கும் மேலாக பெங்களூரு நகரின் மையப்பகுதியில் காபி செடிகளை நட்டு பராமரித்து வருகிறது. தங்கள் வீட்டில் வளர்க்கப்படும் காபி செடியில் இருந்தே காபி தயாரித்து தினமும் பருகுகிறார்கள்.
குடகு, சிக்மகளூரு போன்ற பகுதிகளிலேயே அதிக அளவில் காபி சாகுபடி செய்யப்பட்டு வரும் நிலையில் பெங்களூரு நகர்ப்பகுதியிலும் அதனை வளர்க்க சாத்தியம் இருக்கிறது என்பதை நிரூபித்திருக்கிறது அர்ஜூனின் குடும்பம்.
அதுபற்றி அர்ஜூன் பெல்மார் கூறுகையில், ‘‘எனது தந்தை விவசாய குடும்பத்தை சேர்ந்தவர். நாட்டின் பல்வேறு பகுதிகளில் வளரும் தாவர இனங்களை வீட்டில் வளர்த்து பரிசோதித்து பார்ப்பார். 30 ஆண்டுகளுக்கு முன்பு சிக்மகளூரு சென்றபோது நண்பர்கள் மூலம் அங்கிருந்து சில காபி செடிகளை வாங்கி வந்து வீட்டில் வளர்த்தார். குளிர் பிரதேசங்களில்தான் காபி செடிகள் வளரும் என்று எங்கள் வீட்டில் உள்ளவர்கள் நினைத்தார்கள். அதற்கு மாறாக காபி செடிகளில் பூ பூக்கத் தொடங்கியது. அதன்பிறகுதான் எங்களுக்கு நம்பிக்கை வந்தது. அதன்பிறகு மீண்டும் சிக்மகளூரு சென்று 100-க்கும் மேற்பட்ட காபி செடிகளை வாங்கி வந்தோம்.
அங்குள்ள நண்பர்களும் எப்படி அவைகளை வளர்க்க வேண்டும் என்று ஆலோசனை வழங்கினார்கள். காபி செடிகள் வளர்வதற்கு நிழல் அவசியமானது. எங்கள் வீட்டு தோட்டத்தில் ஏராளமான மரங்கள் இருப்பதால் காபி வளர்வதற்கு போதுமான காலநிலை நிலவுகிறது. அதனால் எங்கள் வீட்டிலே காபி செடி வளர்த்து நாங்கள் காபி பருகுகிறோம்’’ என்கிறார். வீட்டிலேயே தயாரித்து பருகுவதால் காபிக்கு கூடுதல் சுவையும் கிடைக்கிறது என்கிறார். பெரும்பாலான கடைகளில் விற்பனை செய்யப்படும் காபியில் சிக்கரியின் அளவு 10 முதல் 30 சதவீதம் கலக்கப்படுவதால் சுவை மாறுபடுகிறது என்றும் கூறுகிறார்.
‘‘நகர்பகுதியில் எங்கள் குடும்பம்தான் முதன் முதலாக காபி தோட்டத்தை அமைத்திருக்கிறது. குளிர் பிரதேசங்களில்தான் காபி செடிகள் வளரும் என்று பெரும்பாலானோர் நம்புகிறார்கள். என் தந்தையின் அனுபவம் அவர்களுடைய எண்ணத்தில் மாற்றத்தை ஏற்படுத்தி இருக்கிறது. அவர்களும் காபி செடிகளை வளர்க்க விரும்புகிறார்கள். ஒரு காபி செடி ஒரு கிலோ வரை காபி பழங்களை விளைவிக்கும். அதில் இருந்து கொட்டைகளை எடுத்து காபி தயாரிக்க வேண்டும்” என்கிறார்.
Related Tags :
Next Story