5 ஆயிரம் ரூபாயில் நெல் அள்ளும் கருவி


5 ஆயிரம் ரூபாயில் நெல் அள்ளும் கருவி
x
தினத்தந்தி 10 March 2019 2:45 PM IST (Updated: 9 March 2019 5:54 PM IST)
t-max-icont-min-icon

அறுவடை காலங்களில் களத்தில் குவிக்கப்பட்டிருக்கும் நெல்லை கோணிப் பைகளில் நிரப்புவது சிரமமான பணியாக இருக்கிறது.

ஒரு கோணி பையில் நெல்லை நிரப்புவதற்கு இரண்டு, மூன்று பேரின் உதவி தேவைப்படும். அப்படி இருந்தும் நெல்மணிகள் தரையில் விழுந்து வீணாகும். அப்படி நெல் நிரப்பும் பணியில் சிரமத்துடன் ஈடுபட்டு வந்த தாயாருக்கு உதவும் விதத்தில் இயந்திரம் ஒன்றை கண்டுபிடித்திருக்கிறான், பள்ளி மாணவனான மகன். அவனுடைய பெயர் மாரி பள்ளி அபிஷேக்.

தெலுங்கானா மாநிலம் ராஜன்னா சிர்சில்லா மாவட்டத்திலுள்ள ஹனுமஜித்பட் கிராமத்தில் அவன் தாயுடன் வசித்து வருகிறான். அங்குள்ள பள்ளியில் 8-ம் வகுப்பு படித்துக்கொண்டிருக்கிறான். அவனுடைய தந்தை லட்சுமி ராஜம் விவசாயி. தாயார் ராஜவ்வா. இவர்களுக்கு சிறிய அளவில் விவசாய நிலம் இருக்கிறது. விவசாயத்தை நம்பியே இவர்களுடைய வாழ்க்கை நகர்ந்து கொண்டிருக்கிறது. விவசாயத்தின் மூலம் போதிய வருமானம் கிடைக்காததால் லட்சுமி ராஜம் 6 மாதங்களுக்கு முன்பு வேலை தேடி துபாய்க்கு சென்று விட்டார். தாயார் ராஜவ்வா நெல் விற்பனை செய்யும் மையத்தில் வேலை பார்த்து வருகிறார். அங்கு குவித்துவைக்கப்பட்டிருக்கும் நெல்லை கோணிப்பைகளில் நிரப்புவதுதான் அவரது வேலை.

ஒவ்வொரு முறையும் நெல்லை அகன்ற பாத்திரத்தில் நிரப்பி தூக்கிச்சென்று கோணிப் பைகளில் நிரப்பும்போது தாய் அனுபவிக்கும் கஷ்டத்தை நேரில் பார்த்த அபிஷேக் வருந்தினான். தாயார் எளிதாக கோணிப் பையில் நெல்லை நிரப்புவதற்கு வசதியாக இயந்திரம் ஒன்றை கண்டுபிடிக்க முடிவு செய்தான். இதுபற்றி தன்னுடைய பள்ளி ஆசிரியர் வெங்கடேஷிடம் கலந்தாலோசித்தான். அவர் இயந்திரத்திற்கு இறுதி வடிவம் ஏற்படுத்திக்கொடுக்க சம்மதித்தார். இதையடுத்து இரும்பு தடவாளப்பொருட்களை கொண்டு எந்திரத்தை உருவாக்கிவிட்டான்.

அந்த இயந்திரம் இரண்டு சக்கரங்கள், இரும்பு தகடு, இரும்பு பைப்புகள் உள்ளிட்டவற்றை கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது. இயந்திரத்தின் முகப்பில் நெல்லை அள்ளும் விதமாக குறுகிய பட்டைகள் பொருத்தப்பட்டுள்ளன. செங்குத்தாக இருக்கும் இயந்திரத்தை சற்று கீழ்நோக்கி சாய்த்து நெல்லை அள்ளிவிட்டு மேல் நோக்கி தூக்கினால் அந்த நெல் மறுபகுதியில் இருக்கும் கோணிப்பையில் விழுகிறது.

கோணிப்பை நிரம்பியதும் அதனை இயந்திரத்தில் இருந்து பிரித்து மூட்டை இருக்கும் பகுதிக்கு கொண்டு சென்றுவிடலாம். இந்த இயந்திரத்தை உருவாக்குவதற்கு 5 ஆயிரம் ரூபாய் செலவானதாக அபிஷேக் கூறுகிறான்.

‘‘கோணிப்பையில் நெல்லை நிரப்புவது விவசாயி களுக்கு சிரமமான பணியாக இருக்கிறது. ஆண்களை விட பெண்கள் அதிக கஷ்டங்களை அனுபவிக்கிறார்கள். இந்த இயந்திரம் மூன்று பேர் செய்யும் வேலையை எளிதாக செய்துவிடும்’’ என்கிறான் அபிஷேக்.

அபிஷேக் கண்டுபிடித்த இந்த இயந்திரம் டெல்லியில் நடந்த மாநில அளவிலான அறிவியல் கண்காட்சியில் இடம்பிடித்து மூன்றாவது பரிசை வென்றுள்ளது. அவனுக்கு ரொக்கப்பரிசும், லேப்டாப்பும் பரிசாக வழங்கப்பட்டுள்ளது. தெலுங்கானா முதல் -மந்திரி சந்திர சேகரராவும் அபிஷேக்கின் திறமையை பாராட்டி ரூ.1 லட்சத்து 16 ஆயிரத்தை ஊக்கத்தொகையாக வழங்கியுள்ளார்.

Next Story