அழகான மகளுக்காக ஆரோக்கிய உணவு
சரும அலர்ஜி பிரச்சினையால் அவதிப்பட்ட மகளுக்காக இயற்கை விளைபொருட்களை பயன்படுத்தி அழகு சாதன பொருட்கள் தயாரித்துக் கொண்டிருக்கிறார், சுமிதா காமத்.
இயற்கை விவசாயத்தில் விளைந்த பொருட் களைதான் மகளுக்கு சமைத்தும் கொடுக்கிறார். அவருடைய முயற்சிக்கு பலனும் கிடைத்திருக்கிறது. சரும வியாதியால் அவதிப்பட்ட மகளின் ஆரோக்கியத்தில் நல்ல மாற்றம் ஏற்பட்டிருக்கிறது.
இதையடுத்து சருமத்திற்கும், சமையலுக்கும் ரசாயன கலப்பு இல்லாத பொருட்களை பயன் படுத்துமாறு விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறார். இதற்காக சமூக அமைப்பு ஒன்றை ஏற்படுத்தி விவசாயிகளிடம் ரசாயன கலப்பில்லாத பயிர்களை விளைவிக்குமாறு அறிவுறுத்தி வருகிறார். தனது மகளின் சரும ஜொலிப்பை சுட்டிக்காட்டி இயற்கை உணவால் அத்தகைய மாற்றங்கள் ஏற்பட்டிருப்பதாக குறிப்பிடுகிறார்.
சுமிதா காமத், பெங்களூரு அருகில் உள்ள சென்னபட்னா பகுதியை சேர்ந்தவர். ஐ.டி. துறையில் பணி புரிந்தவர். இவருடைய மகள் இரண்டரை வயதில் தோல் ஒவ்வாமை பிரச்சினையால் அவதிப்பட்டு வந்தார். சாப்பிடும் உணவும், சருமத்திற்கு பயன்படுத்தும் பொருட்களும் ஒவ்வாமை பிரச்சினையை அதிகப்படுத்திவிட்டது. அதற்காக மருத்துவ சிகிச்சைகள் மேற்கொண்டபோதும் பலன் கிடைக்கவில்லை. இதையடுத்து இயற்கை விவசாய விளை பொருட்களை பயன்படுத்த தொடங்கினார்.
‘‘ஏழரை ஆண்டுகளாக இயற்கை விளை பொருட்களை பயன்படுத்தி வருகிறேன். சாப்பிடும் உணவுக்கும், உடல் ஆரோக்கியத்திற்கும் நெருங்கிய தொடர்பு இருக்கிறது. என் மகள் தோல் ஒவ்வாமை பிரச்சினையால் அவதிப்பட்டதால் அதனை உணர்வுபூர்வமாக உணர்ந்தேன். பெரும்பாலான பொருட்கள் பிளாஸ்டிக் கவர்களில் அடைக்கப்பட்டுதான் சந்தைக்கு வருகின்றன. காய்கறிகளும், பழவகைகளும் நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து கொண்டுவரப்படுகின்றன. சில பழ வகைகள் வெளிநாடுகளில் இருந்தும் இறக்குமதியாகின்றன.
அவை எப்படி நமது உடல் நலத்துக்கு ஒத்து வரும் என்ற ஆராய்ச்சியில் ஈடுபட்டேன். அப்போதுதான் பெரும்பாலான உடல் ஆரோக்கிய பிரச்சினைகளுக்கு நம்முடைய வாழ்க்கை முறையும், உணவு பழக்கமும்தான் காரணம் என்பது புரிந்தது. அதைத்தொடர்ந்து ரசாயன கலப்புகொண்ட பொருட்களை சாப்பிடுவதை தவிர்க்க முடிவு செய்தேன். ராகி, சிவப்பு அரிசியை பயன்படுத்த தொடங்கினேன். என் மகளின் உடலில் ஏற்பட்டிருந்த கொப்பளங்கள் மறையத் தொடங்கியது. உடல் நிலையிலும் நல்ல மாற்றம் ஏற்பட்டது. இப்போது பல் தேய்ப்பதற்கு வேப்பங்குச்சியைத்தான் பயன்படுத்துகிறோம். மூதாதையர்கள் கடைப்பிடித்த வாழ்க்கை முறைக்கு முற்றிலுமாக மாறிவிட்டோம். அழகு சாதன பொருட்களையும் என் பாட்டியின் வழிகாட்டுதல்படி நானே வீட்டில் தயாரித்தேன். ஷாம்பு, சோப்பு, கிரீம் வகைகளை தயாரித்து பரிசோதித்து பார்த்தேன். அதனை உபயோகித்த பிறகு மகளுக்கு ஒவ்வாமை பிரச்சினை குறைய தொடங்கி இருக்கிறது. மாற்றம் எளிதானது அல்ல. ஆனாலும் மாற்றத்திற்கான முயற்சியை முன்னெடுத்து சென்றோம். அதற்கு நல்ல பலன் கிடைத்திருக்கிறது’’ என்கிறார்.
Related Tags :
Next Story