பெண்களை காக்கும் போலீஸ் குழு


பெண்களை காக்கும் போலீஸ் குழு
x
தினத்தந்தி 10 March 2019 3:45 PM IST (Updated: 9 March 2019 6:06 PM IST)
t-max-icont-min-icon

சமூகவலைத்தளமான வாட்ஸ் அப் மூலம் தகவல்களை பரிமாறிக்கொள்வது பெருகி வருகிறது.

வாட்ஸ் அப் குழுக்களை உருவாக்கி அதில் ஏராளமானவர்களை இணைத்து தங்களுக்குள் தகவல்களை பகிர்ந்து கொள்கிறார்கள். அத்தகைய வாட்ஸ் அப் குழுக்களை பெண்களின் பாதுகாப்புக்காக மகாராஷ்டிரா மாநில போலீசார் பயன்படுத்தி வருகிறார்கள்.

புனே அருகில் உள்ள வாகட் பகுதி போலீசார் 18 வாட்ஸ் அப் குழுக்களை உருவாக்கி இருக்கிறார்கள். ஒவ்வொரு குழுவிலும் அந்த பகுதியை சேர்ந்த தலா 150 பெண்களை இணைத்திருக்கிறார்கள். ஒவ்வொரு குழுவையும் நிர்வகிக்க 3 போலீசார் ஈடுபடுத்தப்பட்டிருக்கிறார்கள். குழுவில் இணைந்திருக்கும் பெண்கள் ஏதேனும் புகாரை பதிவு செய்தால் உடனே நட வடிக்கை எடுக்கும் விதத்தில் குழுவில் உள்ள போலீசார் துரிதமாக செயல்படுகிறார்கள். போலீஸ் நிலையத்திலும், ரோந்து பணியிலும் ஈடுபட்டிருக்கும் மற்ற போலீசாருக்கும் தகவல் தெரிவித்து நட வடிக்கை மேற்கொள்கிறார்கள். வழிப்பறி, ஈவ்டீசிங் உள்பட பெண்களுக்கு எதிராக நடக்கும் சம்பவங்களுக்கு துரிதமாக நடவடிக்கை எடுக்கப்படுகிறது. இதனால் இந்த வாட்ஸ் அப் குழுவுக்கு பெண்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.

வாட்ஸ் அப் குழுவில் இணைந்திருக்கும் சுனிதா ராவ், தனியார் நிறுவனத்தில் பணி புரிகிறார். அவர் சொல்கிறார். ‘‘நான் சாலையில் தனியாக நடந்து சென்று கொண்டிருந்தபோது மோட்டார் சைக்கிளில் இரண்டு பேர் என்னை பின்தொடர்ந்து வந்தார்கள். ஆள் நடமாட்டம் இல்லாததை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்தி என்னுடைய நகையை பறிக்க முயற்சித்தார்கள். நான் கூச்சல் போட்டபடி அவர்களுடன் சண்டை போட்டேன். நான் தைரியமாக செயல்பட்டதால் அவர்களிடமிருந்து நகை தப்பியது. எனினும் எனக்கு காயம் ஏற்பட்டது. அவர்கள் தப்பி சென்றுவிட்டார்கள். நான் உடனே மோட்டார் சைக்கிள் நம்பரையும், சம்பவம் நடந்த இடத்தையும் வாட்ஸ் அப் மூலம் போலீசாருக்கு தெரிவித்தேன். அவர்கள் துரிதமாக செயல்பட்டு என்னிடம் நகை பறிக்க முயன்ற இரண்டு பேரையும் பிடித்துவிட்டார்கள்’’ என்கிறார்.

குடும்பத்தில் பெண்களுக்கு எதிராக நடக்கும் வன்முறைக்கும் இந்த வாட்ஸ் அப் குழுக்கள் மூலம் தீர்வு கிடைத்திருக்கிறது. போலீஸ் நிலையத்திற்கு சென்று புகார் அளிக்க தயங்கும் பெண்கள் வாட்ஸ் அப் குழுவில் பதிவிடுகிறார்கள். தங்களுடைய நெருங்கிய உறவினர்களுக்கு ஏற்படும் பிரச்சினைகளையும் குழுவில் பகிர்ந்து கொண்டு தீர்வு காண்கிறார்கள். சமூக விரோத செயல்களுக்கு எதிராகவும் போலீசார் விரைவாக நடவடிக்கை எடுக்கிறார்கள்.

‘‘பால் வினியோகிக்கும் கடையில் கள்ளத்தனமாக மதுவிற்பனை செய்யப்படுவதாக வாட்ஸ் அப் குழுவில் பகிரப்பட்டிருந்தது. சம்பந்தப்பட்ட கடைக்கு சென்று சோதனை நடத்தி மதுபாட்டில்களை கைப்பற்றினோம். அந்த கடையை நிர்வகித்த பெண் மீதும் வழக்குப்பதிவு செய்தோம்’’ என்கிறார், குழுவை நிர்வகிக்கும் இன்ஸ்பெக்டர் சதீஷ் மானே.

தற்போது இந்த வாட்ஸ் அப் குழுக்களில் 2500-க்கும் மேற்பட்ட பெண்கள் இணைந்திருக்கிறார்கள்.

Next Story