தேர்தலில் அதிக இடங்களில் வெற்றி பெறுவோம்: நாட்டின் பாதுகாப்பு கருதியே பா.ஜனதாவுடன் கூட்டணி எடப்பாடி பழனிசாமி பேட்டி
நாட்டின் பாதுகாப்பு கருதியே பா.ஜனதாவுடன் அ.தி.மு.க. கூட்டணி அமைத்துள்ளது என்றும், தேர்தலில் அதிக இடங்களில் வெற்றி பெறுவோம் என்றும் ஓமலூரில் முதல்–அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறினார்.
சேலம்,
சேலம் மாவட்டம் ஓமலூரில் முதல்–அமைச்சர் எடப்பாடி பழனிசாமி நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:–
கோடை காலத்தில் ஏற்படும் குடிநீர் பிரச்சினையை எவ்வாறு தீர்க்க வேண்டும். உரிய நேரத்தில் நடவடிக்கை எடுத்து சேலம் மாவட்ட மக்களுக்கு தங்கு தடையின்றி பாதுகாப்பான குடிநீர் வழங்குவது குறித்தும் மாவட்ட கலெக்டர் மற்றும் மாநகராட்சி ஆணையாளர் ஆகியோருடன் ஆலோசனை நடத்த வந்துள்ளேன். ஏனென்றால் தேர்தல் தேதி அறிவித்துவிட்டால் அதிகாரிகளிடம் பேச முடியாது. பருவமழை சரியாக பெய்யாத காரணத்தால் கோடைகாலத்தை சமாளிப்பது குறித்து அதிகாரிகளிடம் ஆலோசனை நடத்த உள்ளேன்.
சென்னை தலைமை செயலகத்தில் முன்னாள் எம்.பி. கே.சி.பழனிசாமி, என்னை மரியாதை நிமித்தமாக சந்தித்து மக்களின் கோரிக்கைகளை முன் வைத்தார். அதில் என்ன தவறு இருக்கிறது. எதிர்க்கட்சியினர் ஏதாவது பேச வேண்டும் என்பதற்காக பேசக்கூடாது. பூத கண்ணாடியை வைத்து பார்த்தால் கூட எங்களிடம் குறைகளை கண்டுபிடிக்க முடியாது. எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் கூட என்னை பலமுறை கோட்டையில் சந்தித்து பேசியுள்ளார். எதிர்க்கட்சிகளை சேர்ந்தவர்களாக இருந்தாலும் சரி, பொதுமக்களாக இருந்தாலும் சரி முதல்–அமைச்சரை சந்தித்து மனு கொடுப்பதற்கு அனைத்து உரிமையும் உள்ளது. இதில் தவறு ஏதும் இல்லை.
தி.மு.க. கூட்டணியில் இடம் பெற்றுள்ள ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ, இதற்கு முன்பு அவர்களை எந்த அளவிற்கு வசை பாடினார் என்று தெரியுமா?. ஆனால் இப்போது அவர்களை புகழ்ந்து பேசி வருகிறார்.
நாடாளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க. கூட்டணியை பொறுத்தவரையில் எங்களது கூட்டணியில் எந்தவித குழப்பமும் இல்லை. ஒவ்வொரு கட்சிக்கும் (தே.மு.தி.க.) ஒவ்வொரு நிலைப்பாடு இருக்கும். எதிர்க்கட்சியாக இருக்கும்போது பல்வேறு விமர்சனங்களை சொல்வார்கள். அதேசமயம், தேர்தலில் கூட்டணி என்று வரும்போது ஒருமித்த கருத்து எழும். அ.தி.மு.க. கூட்டணியில் தே.மு.தி.க. சேருவதில் எந்தவித இழுபறியும் இல்லை.
இது சட்டமன்ற தேர்தல் கிடையாது. நாடாளுமன்ற தேர்தல் ஆகும். இந்தியா மிகப்பெரிய ஜனநாயக நாடு. 130 கோடி மக்கள்தொகை கொண்ட நாட்டின் பாதுகாப்பு முக்கியம். அந்த வகையில் மக்களுக்கு யார் பாதுகாப்பு கொடுப்பார்கள். இதனால் நாட்டின் பாதுகாப்பு கருதியே பா.ஜனதாவுடன் கூட்டணி அமைத்துள்ளோம். அதன்படி முதலில் பா.ம.க.வும், அதைத்தொடர்ந்து பா.ஜனதாவும், தொடர்ந்து புதிய தமிழகம் கட்சியுடன் கூட்டணி அமைக்கப்பட்டது. இன்னும் ஓரிரு நாட்களில் மேலும் சில கட்சிகள் கூட்டணியில் சேரும். நாடாளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க. கூட்டணி அதிக இடங்களில் வெற்றி பெறும்.
ராஜீவ்காந்தி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட 7 பேர் பல ஆண்டுகளாக சிறையில் இருந்து வருகிறார்கள். அவர்களை தி.மு.க. ஆட்சியில் பரோலில் விட்டார்களா? ஆனால் அவர்களின் உடல்நலன் கருதி உறவினர்கள் கேட்டுக்கொண்டதால் அ.தி.மு.க. ஆட்சியில் தான் பரோலில் விடுவிக்கப்பட்டனர். 7 பேர் விடுதலைக்காக தி.மு.க. எதையும் செய்யவில்லை. முதல்–அமைச்சராக கருணாநிதி இருந்த காலத்தில், ஒருவரை மட்டும் விடுவிக்க வேண்டும் என்று சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டிருந்தது. இது யாருக்காவது தெரியுமா? ஆனால் அனைத்தும் எங்களுக்கு தெரியும். 7 பேரை விடுதலை செய்ய வேண்டும் என்று சில அமைப்புகள் வேண்டும் என்றே மனித சங்கிலி போராட்டம் நடத்துகிறார்கள்.
தேர்தலுக்காக இதுபோன்ற நாடகம் ஆடுகிறார்கள். உண்மையிலேயே அவர்கள் மீது பாசம் இருந்திருந்தால் தி.மு.க. ஆட்சியில் விடுதலை செய்திருக்கலாமே? ஏன் செய்யவில்லை. தற்போது 7 பேரை விடுதலை செய்ய வேண்டும் என்பதை வலியுறுத்தி சட்டமன்றத்தில் சிறப்பு தீர்மானம் நிறைவேற்றி, அதை கவர்னரிடம் கொடுத்துள்ளோம். அவர் மத்திய அரசிடம் ஆலோசித்து உரிய முடிவை அறிவிப்பார்.
இவ்வாறு முதல்–அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறினார்.