ஏற்காட்டில், காவலர் பணி பார்க்க மோட்டார் சைக்கிளில் ‘லிப்ட்’ கேட்டு வந்த கிராம பெண் உதவியாளர் காயம்


ஏற்காட்டில், காவலர் பணி பார்க்க மோட்டார் சைக்கிளில் ‘லிப்ட்’ கேட்டு வந்த கிராம பெண் உதவியாளர் காயம்
x
தினத்தந்தி 10 March 2019 4:15 AM IST (Updated: 9 March 2019 7:28 PM IST)
t-max-icont-min-icon

ஏற்காடு தாலுகா அலுவலகத்தில் காவலர் பணி பார்க்க, மோட்டார் சைக்கிளில் ‘லிப்ட்’ கேட்டு வந்த கிராம பெண் உதவியாளர் காயம் அடைந்தார்.

ஏற்காடு,

ஏற்காடு தாலுகா அலுவலகத்தில், இரவு மற்றும் பகல் காவலர்கள் பணியிடம் கடந்த 2015–ம் ஆண்டு மே மாதம் முதல் காலியிடமாக உள்ளது. இதுவரை இந்த பணியிடத்திற்கு புதிய ஆட்கள் நியமனம் செய்யப்படவில்லை.

இதனால் கடந்த 3 ஆண்டுகளாக, ஏற்காடு தாலுகாவிற்குட்பட்ட கிராம உதவியாளர்களில் ஆண் பணியாளர்கள் இரவு காவலர்களாகவும், பெண் பணியாளர்கள் பகல் நேர காவலர்களாகவும் தாலுகா அலுவலகத்தில் பணியாற்ற கட்டாயப்படுத்தப்படுகின்றனர்.

இந்நிலையில் நேற்று பகல் நேர காவலராக, ஏற்காட்டில் இருந்து 9 கிலோமீட்டர் தொலைவில் உள்ள நாகலூர் கிராம பெண் உதவியாளர் ஆனந்தி (வயது 42) பணியாற்ற வேண்டும்.

அவர் நேற்று காலை தனது ஊரில் இருந்து பஸ் இல்லாததால், நாகலூரில் இருந்து மோட்டார் சைக்கிளில் வந்த ஒருவரிடம் ‘லிப்ட்’ கேட்டு ஏற்காட்டுக்கு வந்துள்ளார். இவர்கள் தாலுகா அலுவலகம் அருகில் வந்து கொண்டிருந்த போது, அந்த மோட்டார் சைக்கிள் நிலை தடுமாறியதில் ஆனந்தி கீழே விழுந்துள்ளார்.

இதில் ஆனந்தியின் தோள் பட்டை, கை முட்டி உள்ளிட்ட இடங்களில் காயம் ஏற்பட்டு, ஏற்காடு அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். ஏற்காடு தாலுகா அலுவலகத்தின் காவலர் பணியிடங்களை விரைந்து நிரப்புவதுடன், இது போன்று பெண் கிராம உதவியாளர்களை காவலர் பணியில் ஈடுபடுத்துவதை மாவட்ட நிர்வாகம் நிறுத்த வேண்டும் என்று கிராம உதவியாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Next Story