குடும்ப நலத்துறை சார்பில் அம்மா தாய்–சேய் நல ஊட்டச்சத்து பெட்டகம் வழங்கும் திட்டம் கலெக்டர் மலர்விழி தொடங்கி வைத்தார்


குடும்ப நலத்துறை சார்பில் அம்மா தாய்–சேய் நல ஊட்டச்சத்து பெட்டகம் வழங்கும் திட்டம் கலெக்டர் மலர்விழி தொடங்கி வைத்தார்
x
தினத்தந்தி 9 March 2019 11:00 PM GMT (Updated: 9 March 2019 2:10 PM GMT)

குடும்ப நலத்துறை சார்பில் அம்மா தாய்–சேய் நல ஊட்டச்சத்து பெட்டகம் வழங்கும் திட்டத்தை கலெக்டர் மலர்விழி தொடங்கி வைத்தார்.

தர்மபுரி, 

தமிழ்நாடு அரசு மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்பநலத்துறை சார்பில் அம்மா தாய்–சேய் நல ஊட்டச்சத்து பெட்டகம் வழங்கும் திட்டம் தர்மபுரி மாவட்டத்தில் செயல்படுத்தப்பட உள்ளது. இந்த திட்டத்தின் தொடக்கவிழா தர்மபுரி நகராட்சி ஆரம்ப சுகாதார நிலையத்தில் நடைபெற்றது. விழாவுக்கு கலெக்டர் மலர்விழி தலைமை தாங்கி இந்த திட்டத்தை தொடங்கி வைத்து பயனாளிகளுக்கு ஊட்டச்சத்து பெட்டகத்தை வழங்கினார்.

விழாவில் கலெக்டர் மலர்விழி பேசியதாவது:–

மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறை சார்பில் வறுமைக்கோட்டிற்கு கீழ் உள்ள ஏழை குடும்பங்களை சேர்ந்த கர்ப்பிணிகளுக்காக டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி மகப்பேறு நிதியுதவி திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இந்த திட்டத்தின் கீழ் வழங்கப்படும் தொகையில் இருந்து கர்ப்பிணிகளுக்கு பரவலாக உள்ள ரத்தசோகையை போக்கவும், பிறந்த குழந்தைகளின் எடை அளவை உயர்த்தவும், ரூ.2 ஆயிரம் மதிப்புள்ள இரும்பு சத்து மற்றும் ஊட்டச்சத்து பொருட்கள் அடங்கிய அம்மா தாய்–சேய் நல ஊட்டச்சத்து பெட்டகம் 2 வழங்கப்படுகிறது.

இந்த திட்டத்தால் ஒவ்வொரு ஆண்டும் மாவட்டத்தில் சுமார் 16 கர்ப்பிணிகள் பயன்பெறுவார்கள். இதன் மூலம் மகப்பேறு காலத்தில் தாய்மார்கள் மற்றும் குழந்தைகள் இறப்பு விகிதம் கணிசமாக குறையும். இந்த ஊட்டச்சத்து பெட்டகத்தில் கர்ப்பிணி பெண்களுக்கு தேவையான ஊட்டச்சத்து மாவு 1 கிலோ, 200 மி.லி. அளவு கொண்ட 3 பாட்டில்களில் ஊட்டச்சத்து திரவம், உலர் பேரீச்சம்பழம் 1 கிலோ, புரதசத்து பிஸ்கட் 500 கிராம், ஆவின்நெய் 500 கிராம், ஆல்பெண்டசோல் குடல்புழுக்கள் நீக்க மாத்திரை, பருத்தி துண்டு ஆகிய பொருட்கள் உள்ளடங்கி உள்ளது. இதை கருவுற்ற பெண்கள் நல்லமுறையில் பயன்படுத்தி பயன்பெற வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

இந்த நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் ரகமத்துல்லாகான், உதவி கலெக்டர் சிவன்அருள், சுகாதார பணிகள் துணை இயக்குனர் ஜெகதீஷ்குமார், நகராட்சி ஆணையர் மகேஸ்வரி, வட்டார மருத்துவ அலுவலர் சதீஷ்குமார், கூட்டுறவு சங்க தலைவர் கோவிந்தசாமி, மருத்துவ அலுவலர் முருகேசன் மற்றும் டாக்டர்கள், செவிலியர்கள், பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர்.


Next Story