வீடுகளில் நஞ்சில்லா விவசாயம் மேற்கொள்ள மாணவ-மாணவிகள் முன்வர வேண்டும் கருத்தரங்கில் தோட்டக்கலை இணை இயக்குனர் பேச்சு


வீடுகளில் நஞ்சில்லா விவசாயம் மேற்கொள்ள மாணவ-மாணவிகள் முன்வர வேண்டும் கருத்தரங்கில் தோட்டக்கலை இணை இயக்குனர் பேச்சு
x
தினத்தந்தி 10 March 2019 4:30 AM IST (Updated: 9 March 2019 10:18 PM IST)
t-max-icont-min-icon

வீடுகளில் நஞ்சில்லா விவசாயம் மேற்கொள்ள மாணவ-மாணவிகள் முன்வர வேண்டும் என்று ஊட்டியில் நடந்த கருத்தரங்கில் தோட்டக்கலை இணை இயக்குனர் பேசினார்.

ஊட்டி,

நீலகிரி மாவட்ட பசுமை படை சார்பில் ‘இயற்கை விவசாயம் நம் வீட்டுத்தோட்டத்தில், மண்ணைத் தொடுவோம், நீலகிரி உயிர்ச்சூழலை பாதுகாப்போம்’ என்ற செயல்திட்டம் குறித்து பள்ளி மாணவ-மாணவிகளுக்கு கருத்தரங்கம் ஊட்டி பழங்குடியினர் பண்பாட்டு மையத்தில் நேற்று நடைபெற்றது. குன்னூர் கல்வி மாவட்ட ஒருங்கிணைப்பாளர் சிவதாஸ் அனைவரையும் வரவேற்றார். செயல்திட்டம் மற்றும் இயற்கை விவசாயத்தின் அவசியம் குறித்து கூடலூர் கல்வி மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ராபர்ட் விளக்கி பேசினார்.

அதனை தொடர்ந்து அனைத்து ஜீவன்களின் வாழ்வாதாரமான மண்ணை குப்பைகளாலும், ரசாயன கழிவுகளாலும், மட்காத பிளாஸ்டிக் பொருட்களாலும் மாசுபடுத்த மாட்டேன். உலகில் வாழும் அனைத்து மக்களின் உணவு தேவைகளை பூர்த்தி செய்யும் மண்ணை கண்ணின் இமை போல பாதுகாப்பேன். என் வீட்டு தோட்டத்தில் நஞ்சில்லா விவசாயம் மேற்கொள்வேன் என்று பள்ளி மாணவ- மாணவிகள் இயற்கை பாதுகாப்பு உறுதிமொழியை எடுத்துக்கொண்டனர்.

கருத்தரங்கில் மருத்துவ குணம் உடைய தாவரங்கள் காட்சிப்படுத்தப்பட்டு இருந்தது. அதில் அஜீரணத்துக்கு பயன்படும் புதினா, தோல் நோயை குணமாக்கும் கற்றாழை, சளியை போக்கும் துளசி, வாய்ப்புண்ணை சரிசெய்யும் மணத்தக்காளி, ஆவாரம் உள்ளிட்டவை இடம்பெற்றன. இதையடுத்து தோட்டக்கலை இணை இயக்குனர் சிவசுப்பிரமணியம் மற்றும் பள்ளி மாணவர்கள் மண் நிரப்பி வைக்கப்பட்ட தொட்டிகளில் விதைகளை தூவி தண்ணீர் ஊற்றி செயல்திட்டத்தை தொடங்கி வைத்தனர். பின்னர் தோட்டக்கலை இணை இயக்குனர் சிவசுப்பிரமணியம் பேசியதாவது:-

மாட்டு சாணம், மண்புழு உரத்தை கொண்டு இயற்கை விவசாயம் மேற்கொள்ளப்படுகிறது. இயற்கை முறையில் விளைவிக்கப்பட்ட காய்கறிகளால் உடல் நலன் நன்றாக இருந்தது. தற்போது ரசாயன உரங்கள், பூச்சிக்கொல்லி மருந்துகள் அதிகளவில் பயன்படுத்தப்படுகிறது. தோட்டக்கலைத்துறை மூலம் தண்ணீர் சோதனை செய்யப்பட்டது. இதில் மலை மாவட்டமான நீலகிரியில் இருந்து மேட்டுப்பாளையத்தில் ஓடும் தண்ணீரில் அதிகளவில் ரசாயனம் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. பவானிசாகர் அணை நீரில் ரசாயனம் குறைவாக உள்ளது.

இது மண்ணின் வளத்தை கெடுக்கிறது. இதனால் நீலகிரி மாவட்டம் மட்டுமல்லாமல், சமவெளிப்பகுதிகளில் உள்ள விவசாயம் பாதிக்கப்படுகிறது. இதனை கருத்தில் கொண்டு ஒரு விவசாயி 1 சென்ட் நிலத்தில் இயற்கை விவசாயம் மேற்கொள்ள வேண்டும் என்ற திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது. பள்ளி மாணவ-மாணவிகள் தங்களது வீட்டிலேயே நஞ்சில்லா விவசாயம் செய்ய முன்வர வேண்டும். பள்ளிகளில் இயற்கை முறையில் காய்கறி தோட்டம் அமைப்பவர்கள் தோட்டக்கலைத்துறைக்கு விண்ணப்பிக்கலாம். வருகிற மலர் கண்காட்சியின் போது இயற்கை விவசாயம் மேற்கொள்ளும் சிறந்த பள்ளிகளுக்கு முதல் முறையாக பரிசுகள் வழங்கப்பட உள்ளது. இவ்வாறு அவர் பேசினார்.

அதனை தொடர்ந்து கருத்தரங்கில் கலந்துகொண்ட அரசு மற்றும் தனியார் பள்ளி மாணவ-மாணவிகள் நூற்றுக்கும் மேற்பட்டோருக்கு தலா ஒரு கார்னேசன் நாற்று வழங்கப்பட்டது. இதில் நீலகிரி மாவட்ட இயற்கை வேளாண்மை சங்க செயலாளர் ராமதாஸ், பள்ளி ஆசிரியர்கள் பலர் கலந்துகொண்டனர்.

Next Story