கவுண்டம்பாளையம் கோவில் அருகே மீட்கப்பட்ட பச்சிளம் குழந்தை காப்பகத்தில் ஒப்படைப்பு
கவுண்டம்பாளையம் கோவில் அருகே மீட்கப்பட்ட பச்சிளம் குழந்தை காப்பகத்தில் ஒப்படைக்கப்பட்டது.
கோவை,
கோவை கவுண்டம்பாளையம் சரவணாநகரில் உள்ள ஒரு கோவில் அருகே கடந்த 7-ந் தேதி பச்சிளம் குழந்தையின் அழுகுரல் கேட்டது. இதை கேட்டு அக்கம்பக்கத்தினர் விரைந்து வந்து பார்த்தனர். அப்போது அங்கு தொப்புள் கொடி அகற்றப்படாத நிலையில் பச்சிளம் பெண் குழந்தை அனாதையாக கிடந்தது.
இது குறித்த தகவலின் பேரில் துடியலூர் அனைத்து மகளிர் போலீசார் விரைந்து சென்று பச்சிளம் குழந்தையை மீட்டு கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு குழந்தைகள் நல வார்டில் வைத்து குழந்தைக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. அங்கு குழந்தை நல்ல ஆரோக்கியத்துடன் இருந்தது.
இந்த நிலையில் கோவை கிணத்துக்கடவில் உள்ள குழந்தைகள் காப்பகத்தில் அந்த பச்சிளம் குழந்தையை ஒப்படைக்க திட்டமிடப்பட்டது. இதையடுத்து அந்த குழந்தைக்கு ‘அர்ச்சனா’ என்று பெயர் சூட்டப்பட்டு, மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் ஏ.ரெக்ஷலின் முன்னிலையில் காப்பக நிர்வாகிகளிடம் கோவை அரசு ஆஸ்பத்திரி இருப்பிட மருத்துவ அதிகாரி டாக்டர் சவுந்திரவேல் ஒப்படைத்தார்.இது குறித்து டாக்டர் சவுந்திரவேல் கூறியதாவது:-
மீட்கப்பட்ட பச்சிளம் குழந்தை ஒரு கோவில் அருகே கிடந்துள்ளது. இதனால் தெருநாய்கள், வன விலங்குகளால் பச்சிளம் குழந்தைக்கு ஆபத்து நிகழ வாய்ப்பு ஏற்பட்டு இருக்கலாம். குழந்தையை வளர்க்க முடியாதவர்களின் குழந்தையை பாதுகாப்பதற்காகவே தொட்டில் குழந்தைகள் திட்டம் செயல் படுத்தப்பட்டு வருகிறது. அந்த தொட்டிலில் குழந்தையை போட்டால் பாதுகாப்பாக இருக்கும். மீட்கப்பட்ட பச்சிளம் குழந்தையின் தாய் மீண்டும் குழந்தையை வளர்க்க விரும்பினால், கோவை அரசு ஆஸ்பத்திரிக்கோ அல்லது காப்பகத்திற்கோ நேரில் சென்று தகுந்த ஆதாரங்களை சமர்ப்பித்து குழந்தையை பெற்றுச்செல்லலாம். இல்லை என்றால் அந்த குழந்தை காப்பகத்திலேயே பராமரிக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
Related Tags :
Next Story