இருங்களூரில் நடந்த ஜல்லிக்கட்டில் காளைகள் முட்டியதில் 12 பேர் காயம்


இருங்களூரில் நடந்த ஜல்லிக்கட்டில் காளைகள் முட்டியதில் 12 பேர் காயம்
x
தினத்தந்தி 9 March 2019 11:00 PM GMT (Updated: 9 March 2019 5:25 PM GMT)

இருங்களூரில் நடந்த ஜல்லிக்கட்டில் காளைகள் முட்டியதில் 12 பேர் காயமடைந்தனர்.

சமயபுரம்,

சமயபுரம் அருகே உள்ள தெற்கு இருங்களூரில் நேற்று ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்றது. இதில் பங்கேற்பதற்காக திருச்சி, கரூர், அரியலூர், பெரம்பலூர், புதுக்கோட்டை, தஞ்சாவூர், நாமக்கல், மதுரை, சேலம் உள்ளிட்ட மாவட்டங்களின் பல்வேறு பகுதிகளில் இருந்து 650 காளைகளை இருங்களூருக்கு ஆட்டோ, வேன், லாரி போன்ற வாகனங்களில் அழைத்து வந்திருந்தனர். காளைகளை அடக்குவதற்காக பல்வேறு ஊர்களில் இருந்தும் மாடுபிடி வீரர்கள் 300 பேர் வந்திருந்தனர். மருத்துவ குழுவினரின் பரிசோதனைக்கு பின்னர் காளைகள் மற்றும் மாடுபிடி வீரர்கள் மைதானத்திற்குள் அனுமதிக்கப்பட்டனர்.

ஜல்லிக்கட்டு போட்டியை லால்குடி கோட்டாட்சியர் பாலாஜி தொடங்கி வைத்தார். வாடிவாசலில் இருந்து சீறிப்பாய்ந்து வந்த காளைகளை, மாடுபிடி வீரர்கள் அடக்க முயன்றனர். சில காளைகள் வீரர்களின் பிடியில் சிக்காமல் தப்பி சென்றன. இதில் காளையை அடக்கிய வீரர்களுக்கு பீரோ, கட்டில், சைக்கிள், மின்விசிறி, குக்கர், மிக்சி, செல்போன் உள்ளிட்ட பல்வேறு பரிசுகள் வழங்கப்பட்டன. இதேபோல் வீரர்களிடம் பிடிபடாத காளைகளின் உரிமையாளர்களுக்கும் பரிசுகள் வழங்கப்பட்டன.


காளைகள் முட்டியதில் இனாம்சமயபுரம் பாபு(வயது 26), அரியலூர் ரெய்மான்(21), புள்ளம்பாடி பார்த்திபன்(31), மேலவாளாடி விஷ்வா (28), கொத்தமங்கலம் ஆனந்த்(23), மதுரை ரமேஷ்(28), அரியமங்கலம் பாலசுப்பிரமணியன்(28), கண்ணாக்குடி ராஜாதுரை(33), அல்லூர் நாகராஜ்(45) உள்பட 12 வீரர்கள் காயமடைந்தனர். அவர்களுக்கு அப்பகுதியில் அமைக்கப்பட்டிருந்த மருத்துவ முகாமில், முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது.

ஜல்லிக்கட்டு போட்டியை பார்ப்பதற்காக திருச்சி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஆண்கள், பெண்கள், சிறுவர்கள் என ஏராளமானவர்கள் வந்திருந்தனர். அவர்கள் கொளுத்தும் வெயிலையும் பொருட்படுத்தாமல், தடுப்பு வேலிகளை தாண்டி இருபுறமும் நிறுத்தப்பட்டிருந்த டிராக்டர்கள் மற்றும் மரங்களின் மீது ஏறி நின்று ஜல்லிக்கட்டை பார்த்து ரசித்தனர். திருச்சி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜியாவுல்ஹக் தலைமையில், துணை சூப்பிரண்டு ராஜசேகர் உள்பட 3 துணை சூப்பிரண்டுகள், 10 இன்ஸ்பெக்டர்கள் மற்றும் 350–க்கும் மேற்பட்ட போலீசார், ஊர் காவல் படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். விழாவிற்கான ஏற்பாடுகளை ஆரோக்கியசாமி, ஜான்பிரிட்டோ, பிரிட்டோபிரபாகரன் உள்ளிட்ட விழாக்குழுவினர் மற்றும் பொதுமக்கள் செய்திருந்தனர். மண்ணச்சநல்லூர் தாசில்தார் ராஜேஸ்கண்ணன் உள்பட வருவாய்த்துறையினர் போட்டியை கண்காணித்தனர்.

Next Story