பாளையங்கோட்டை அருகே அங்கன்வாடி மையத்தில் மகளிர் தின விழா கலெக்டர் ஷில்பா பங்கேற்பு


பாளையங்கோட்டை அருகே அங்கன்வாடி மையத்தில் மகளிர் தின விழா கலெக்டர் ஷில்பா பங்கேற்பு
x
தினத்தந்தி 9 March 2019 10:15 PM GMT (Updated: 9 March 2019 6:05 PM GMT)

பாளையங்கோட்டை அருகே அங்கன்வாடி மையத்தில் நடந்த மகளிர் தின விழாவில் கலெக்டர் ஷில்பா கலந்து கொண்டார்.

நெல்லை, 

பாளையங்கோட்டை அருகே உள்ள ரெட்டியார்பட்டி அங்கன்வாடி மையத்தில் உலக மகளிர் தின விழா நடந்தது. கலெக்டர் ஷில்பா தலைமை தாங்கி பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

நெல்லை மாவட்டத்தில் ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி பணிகள் திட்டத்தின் சார்பில் செப்டம்பர்-2018 முதல் போஷான் அபியான் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த திட்டத்தின் முக்கிய நோக்கம், எடை குறைவுடன் குழந்தைகள் பிறப்பதை தடுத்தல், குழந்தைகள், வளர்இளம் பெண்கள் மற்றும் பெண்களுக்கு ஏற்படும் இரும்புச்சத்து குறைபாட்டினை குறைத்தல், குழந்தைகளிடம் காணப்படும் ஊட்டச்சத்து பற்றாக்குறை, வயதிற்கேற்ற உயரமின்மை (குள்ளத்தன்மை) மற்றும் உயரத்திற்கேற்ற எடையின்மை போன்றவற்றை தடுத்தல் ஆகும்.

இந்த திட்டத்தில் ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி பணிகள் திட்டம், மகளிர் திட்டம், ஊரக வளர்ச்சித்துறை, தோட்டக்கலை துறை, மாநகராட்சி, நகராட்சி, நகர பஞ்சாயத்து, உணவு பாதுகாப்பு, இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு துறை, தகவல் மற்றும் ஒலிபரப்பு துறை, சுகாதார துறை போன்ற துறையினரோடு இணைந்து மாவட்டத்தில் பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகிறது.

மருத்துவ துறையுடன் இணைந்து வளர்இளம் பெண்கள் மற்றும் பெண்களுக்கு ஹீமோகுளோபின் அளவு சோதிக்கப்பட்டு ரத்த சோகை உள்ளதா? என்பதை கண்டறிவதற்கு சிறப்பு மருத்துவ முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது. மாவட்டத்தில் பிறந்த குழந்தை முதல் 5 வயதிற்கு உட்பட்ட அனைத்து குழந்தைகளுக்கும் வயதிற்கு ஏற்ற எடை கணக்கிடப்பட்டு வருகிறது.

போஷான் அபியான் திட்டம் சம்பந்தமாக பொதுமக்களுக்கு அங்கன்வாடி பணியாளர்கள் மூலமாக பேரணிகள், பள்ளிகளில் ஊட்டச்சத்து உறுதிமொழி, கர்ப்பிணி பெண்கள், பாலூட்டும் தாய்மார்கள், குழந்தைகள் மற்றும் பெரியோர்களுக்கு ஊட்டச்சத்து குறைபாட்டினால் ஏற்படும் நோய்கள், அதனால் ஏற்படும் விளைவுகள் சம்பந்தமாக விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.

நமது மாவட்டத்தில் குறைவான எடை கொண்ட குழந்தைகள் பிறப்பினை தடுத்தல், ரத்த சோகையினை குறைத்தல், ஒவ்வொரு குழந்தையும் வயதிற்கேற்ற உயரம், உயரத்திற்கேற்ற எடை இருப்பதற்கு பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. மேலும், அர்ப்பணிப்பு சேவையோடு இந்த பணிகளை மேற்கொள்ளும் அனைத்து அங்கன்வாடி மைய ஆசிரியர்கள், பணியாளர்களுக்கு மகளிர் தின நல்வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

விழாவில் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்ட இயக்குனர் ஜெயசூர்யா, மாவட்ட சமூக நல அலுவலர் சரஸ்வதி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Next Story