சென்னை பூந்தமல்லி நெடுஞ்சாலையில் 70 ஆண்டு பழமையான மரம் முறிந்து விழுந்தது 1 மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு


சென்னை பூந்தமல்லி நெடுஞ்சாலையில் 70 ஆண்டு பழமையான மரம் முறிந்து விழுந்தது 1 மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு
x
தினத்தந்தி 10 March 2019 3:45 AM IST (Updated: 10 March 2019 12:34 AM IST)
t-max-icont-min-icon

சென்னை பூந்தமல்லி நெடுஞ்சாலையில் 70 ஆண்டு பழமையான மரம் முறிந்து விழுந்தது. இதனால் 1 மணி நேரம் போக்குவரத்து பாதித்தது.

சென்னை,

சென்னை எழும்பூர் பூந்தமல்லி நெடுஞ்சாலையின் இரு ஓரங்களிலும் பாதாள சாக்கடை சீரமைப்பு மற்றும் மழைநீர் வடிகால் அமைக்கும் பணிகள் நடந்து வருகின்றன. இதற்காக 4 அடி அகல குழி தொண்டப்பட்டு உள்ளது.

இந்தநிலையில் பூந்தமல்லி நெடுஞ்சாலையில் கெங்குரெட்டி பாலம் சந்திப்பு அருகேயுள்ள பகுதியில் இருந்த 70 ஆண்டு பழமையான தூங்குமூஞ்சி மரம் ஒன்று நேற்று பிற்பகல் 1.15 மணியளவில் திடீரென முறிந்து பூந்தமல்லி நெடுஞ்சாலையில் (கீழ்ப்பாக்கம்-எழும்பூர்) விழுந்தது.

இதனால் அந்த வழியாக போக்குவரத்து தடைபட்டது. வாகனங்கள் செல்ல முடியாமல் சாலையிலேயே ஒன்றன் பின் ஒன்றாக அணிவகுத்து நின்றன. தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு வேப்பேரி இன்ஸ்பெக்டர் தனலட்சுமி தலைமையிலான போலீசார், போக்குவரத்து போலீசார் வந்தனர். தீயணைப்பு அதிகாரி (மெக்கானிக் பிரிவு) விஜயகுமார் தலைமையிலான வீரர் களும் களத்துக்கு வந்தனர்.

பின்னர் மரம் அறுவை எந்திரம், அரிவாள் உள்ளிட்டவை மூலம் சாலையில் விழுந்து கிடந்த மரத்தை கொஞ்சம் கொஞ்சமாக அறுத்து அகற்றும் பணியில் ஈடுபட்டனர். இந்த பணிகளில் அப்பகுதி இளைஞர்களும் ஈடுபட்டனர். சுமார் 2.15 மணியளவில் சாலையில் விழுந்து கிடந்த மரம் அப்புறப்படுத்தப்பட்டது. அதனைத்தொடர்ந்து வழக்கம்போல வாகனங்கள் சென்றன.

மரம் விழுந்த சமயத்தில் அந்த வழியாக யாரும் செல்லவில்லை. ஒருவேளை வாகனங்கள் செல்லும்போது இந்த மரம் விழுந்திருந்தால் நிச்சயம் அசம்பாவித சம்பவங்கள் நடந்திருக்க வாய்ப்புண்டு.

இந்த சம்பவம் காரணமாக அந்த பகுதியில் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. மரம் விழுந்த சமயத்தில் அந்த வழியாக செல்லும் வாகனங்கள் அருகேயுள்ள ராஜா அண்ணாமலை சாலை மற்றும் அழகப்பா சாலை வழியாக புரசைவாக்கம் நோக்கி திருப்பி விடப்பட்டன.

Next Story